கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் முத்தையா சுவாமி, பச்சையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 23 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று காலை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இந்த சிறப்பு வழிபாடு, கடந்த 29ம் தேதி காலை 6:00 மணியளவில் கணபதி ஹோமத் துடன் துவங்கியது.
கடந்த 2ம் தேதி விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5:30 மணியளவில் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை நான்காம் கால யாக பூஜை, மாலை 5ம் கால யாக பூ ஜை நடந்தது. நேற்று காலை 6:00 மணியளவில் ஆறாம் கால யாக பூஜைகள் முடிந்து, காலை 9:00 மணியளவில் கடம் புறப்பாடாகி காலை 9:50 மணியளவில் ராஜகோபுரம், முத்தையா சுவாமி, பச்சையம்மன், கொடிமரம் உள்ளிட்ட கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. விழா ஏற்பாடுகளை ஹூந்து சமய அறநிலையத்துறை, பரம்பரை அறங்காவலர்கள் கலைச்செல்வம், செல்வம், வாழப்பாடி கலைமணி ராமமூர்த்தி, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி, புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன், சோழன் குமார் வாண்டையார், உபயதாரர்கள், குலதெய்வ பக்தர்கள், கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.