பதிவு செய்த நாள்
29
ஜன
2013
04:01
கடவுளைக் காண முதலில் உன்னைத் தகுதியுடையவனாக்கி கொள். அவரைத் தேடி நீ ஓட வேண்டாம். அவரே உனக்குள் காட்சி தருவார். ஒரே கடலில் உள்ள நீர் ஆவியாகி, உலகம் முழுவதும் மழையாக பொழிவதைப்போல், ஒரே கடவுள் மக்களின் நன்மைக்காகப் பலகோடி அவதாரம் எடுத்து வந்து பாதுகாக்கிறார்.
துன்பம் வரும் போது தான் பாவம், புண்ணியத்தைப் பற்றிய நினைவு வருகிறது. அப்போது தான் மனிதன் தன்னைச் சீர்திருத்திக் கொள்ள முயற்சிக்கிறான். நெருப்போடு சேர்ந்த அனைத்தும் நெருப்பாகவே மாறிவிடுவதைப் போல், கடவுளோடு சேர்ந்த அனைவரும் கடவுள் மயமாக மாறிவிடுவர். உலகில் பெய்யும் மழை நதிவழியாகக் கடலைச் சேருவதைப் போல, உலகில் உள்ள அனைவரும் இறைவனைச் சேர்ந்தாக வேண்டும்.
நீ கவலையில்லாமல் இருக்க வேண்டுமானால் கடவுளைச் சத்யமாக நம்பிவிட்டு உனது செயல்களைத்திருந்தச் செய். அப்போது அச்சமோ, ஆசையோ உன்னை அணுகாது. உள்ளத்தெளிவு, மன அமைதி நாசமடையாதபடி, மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். இது உனக்கு நீயே செய்யும் மாபெரும் தொண்டாகும். நல்ல பேனா மட்டும் இருந்தால் போதாது, பகுத்தறிவு உள்ளவன் கையில் இருந்தால் தான் நல்ல விஷயத்தை எழுத முடியும். பேனா தானாகவே எழுதாது, அதைப்போல் நீயும் தானாகவே இயங்க முடியாது. பேனாவை இயக்க நீ வேண்டும், உன்னை இயக்க கடவுள் வேண்டும்.
நீ குற்றமற்றவனாக வேண்டுமானால் உன் உள்ளம், பேச்சு, செயல் மூன்றும் ஒன்றுபட்டிருக்கட்டும். கர்வமுள்ளவனுக்கு உள்ளம், பேச்சு, செயல்கள் ஒன்றுபடுவது மிகவும் அரிதாகும். உள்ளம் தூய்மையாக வேண்டுமானால் சிவநாமத்தை ஜபம் செய்ய வேண்டும். தன்னம்பிக்கையுள்ளவன் தன் ஜீவனைச் சிவமாகக் கண்டு உய்வான். பரிசுத்தமுள்ளவன் தனக்குள் ஈசனைத் தானாகாவே கண்டு கொள்வான்.
பெயரில் மட்டும் தங்கம் இருந்தால் போதாது. மனதை மாசற்ற தங்கமாக மாற்றிக் கொள். தங்கப் பாத்திரத்தில் எது வைத்தாலும் கெடாது. உன் மனதை நீ தங்கமாக்கிக் கொண்டுவிடு. உண்மையான அறிவு உனக்கு இருக்குமானால் அனைத்தும் உனக்குக் கடவுளாகவே தெரியும். அகமும், புறமும் கடவுள் ஒருவரே நிறைந்துள்ளார். நீ கடவுளை வழிபடவே பிறந்திருக்கிறாய். உனக்குக் கடவுள் கொடுத்துள்ள தொழில் நீ கடவுளை மறவாமலிருப்பது ஒன்றேயாகும். தேசத்தையும், மக்களையும் தெய்வமாக நம்பி, அவர்களுக்கு பணிபுரிந்து வருபவன் மிகப்பெரிய தவவலிமைகளைப் பெற்று உய்வான்.
உன்னை நீ நல்வழிக்கு முதலில் கொண்டு செல். உலகைப்பற்றிய கவலை உனக்கு வேண்டாம். உலகைப்பற்றிய கவலையைக்கடவுளிடமே விட்டுவிடு. உன்னை நீ சீர்திருத்திக் கொண்டால் உலகம் தானாகவே சீராகி விடும். -சாந்தானந்தா