பதிவு செய்த நாள்
30
ஜன
2013
11:01
திருச்சி: உறையூர் தான்தோன்றீஸ்வரர் சமேத குங்குமவல்லி நாயகி அம்மனுக்கு வளைகாப்பு திருவிழா, நாளை மறுநாள் துவங்குகிறது. நாகக்கன்னியான காந்திமதி என்பவர், சிவபக்தியில் சிறந்து விளங்கினார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காந்திமதி, ஒருமுறை நந்தவனம் வழியாக நடந்து சென்றபோது, வெயில் காரணமாக உடல் சோர்வுற்று ஓரிடத்தில் அமர்ந்துவிட்டார். "இறைவா, இன்று உன்னை தரிசிக்க முடியாமல் போய்விடுமோ என்று கண்ணீர் விட்டு கதறினார். அவரின் பக்திக்கு இரங்கிய சிவப்பெருமான், ரிஷப வாகனத்தோடு காட்சியளித்தார். "மகப்பேறு காலம் வரை என்னை இங்கேயே தரிசிக்கலாம் என்று வரமளித்தார். காந்திமதிக்கு சிவப்பெருமான் வரமளித்த ஸ்தலமாக, உறையூர் சாலைரோடு தான்தோன்றீஸ்வரர் கோவில் விளங்குகிறது. காந்திமதி அம்மையின் நினைவாக, ஆண்டுதோறும், தைமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை, வளைகாப்பு திருவிழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். நாளை மறுநாள் (1ம் தேதி), 63வது வளைகாப்பு திருவிழா சிறப்பாக துவங்குகிறது. கர்ப்பிணிப் பெண்ணுக்கு செய்யப்படும், சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்தும், தான்தோன்றீஸ்வரர் உடனுறை குங்குமவல்லி நாயகி தாயாருக்கு செய்யப்படும். பொன் காப்பு, வெள்ளிக்காப்பு, வேப்பிலைக்காப்பு என்னும், 5 விதமான சித்தாரன்னங்கள் நைவேத்யம் செய்தும், லட்சக்கணக்கான வளையல்கள் அணிவித்தும், குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அம்மனுக்கு சாற்றப்படும். முதல்நாள் கர்ப்பிணிக்கு: ஒன்றாம் தேதி முதல், 3ம் தேதி வரை, தொடர்ந்து வளைகாப்பு திருவிழா நடக்கிறது. முதல்நாள் காலை, 7.30 மணிக்கு, கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் பெற, ஹோம பூஜையும், மதியம், 1 மணிக்கு, வளைகாப்பு சம்பிரதாய பூஜையும், 2 மணிக்கு, தீபராதனையும் நடக்கிறது. பக்தர்களுக்கு, 48 நாட்கள் பூஜிக்கப்பட்ட வளையல், குங்குமம், அம்மன் படம் பிரசாதமாக வழங்கப்படும். குழந்தை பாக்கியம்: 2ம் தேதி காலை, 7 மணிக்கு, குழந்தை பாக்கியம் வேண்டி, ஹோமம், சந்தான பாக்கியம் வேண்டி, ஹோம பூஜையும், மதியம், 12 மணிக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. திருமணத்தடை: 3ம் தேதி காலை, 7.30 மணி முதல், 9 மணி வரை, ஆண், பெண் இருபாலருக்கும், மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், சுமங்கலிகளுக்கு சிறப்பு பூஜையும், மதியம், 1 மணிக்கு, திருமணத்தடை நீங்கி, விவாகம் நடக்கவும், மாங்கல்ய பாக்கியத்துடன் வாழவும் சிறப்பு பூஜையும் நடக்கிறது. மதியம், 2 மணிக்கு, பிரசாதம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை அறங்காவலர் கருணாமூர்த்தி, கோவில் ஸ்தானிகர் ஹரிஹர குருக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்கின்றனர்.