பதிவு செய்த நாள்
30
ஜன
2013
11:01
கும்பகோணம்: திருநரையூர் சித்தநாத ஸ்வாமிகோவில் மஹா கும்பாபிஷேகம் ஃபிப்., 1ம் தேதி நடப்பதால், இன்று முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. கும்பகோணம் அருகே உள்ள திருநரையூரில் சௌந்திரநாயகி உடனாய சித்தநாதஸ்வாமி கோவில் உள்ளது. மஹாலெட்சுமி அவதார தலமாக போற்றப்படும் இங்கு, மேதாவி என்ற மகரிஷி சித்தநாதரை நோக்கி தவம்செய்து, திருமகளான லட்சுமியை மகளாக பெற்று வஞ்சுளவல்லி நாச்சியார் என்ற பெயரோடு, திருமால் ஸ்ரீனிவாசபெருமாளுக்கு திருமணம் செய்து வைத்ததால், நாச்சியார்கோவில் என பெயர் வந்தது. பாண்டிய மன்னன் சந்திரகுப்தனுக்கு ஏற்பட்டுள்ள குஷ்டரோகம் சித்தநாதஸ்வாமிக்கு அபிஷேகம் செய்த நல்லெண்ணையால், அவரது நோய் நிவர்த்தியானதாக புராணம் கூறுகிறது. இன்றும் பலர் நோய் நிவர்த்திக்கு நல்லெண்ணை அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தில், பழுதடைந்தவைகளை நீக்கி பலலட்சம் ரூபாய் செலவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. கனடா நாட்டில் வசிக்கும் டி.ஜி.நடராஜசிவாச்சாரியார் தலைமையில் பல்வேறு உபயதாரர்களைக்கொண்டு, திருப்பணி வேலைகள் முடிக்கப்பட்டுள்ளது. வரும் ஃபிப்ரவரி, 1ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மாலை, 5 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 31ம் தேதி வியாழன் காலை, இரண்டாம் காலமும், மாலை, மூன்றாம் காலமும் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. ஃபிப்ரவரி, 1ம் தேதி காலை, 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. காலை, 8 மணிக்கு கஜபூஜை, அஸ்வ பூஜைகள் நடக்கிறது. 8.30 மணிக்கு கடங்கள் புறப்படுகிறது. 9.00 மணிக்கு அனைத்து விமானங்கள் மற்றும் ராஜகோபுர மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. 9.15 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மஹாபிஷேகம் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. பின் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. கும்பாபிஷேக விழாவில் தமிழக அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டசபை, இந்துசமய அறநிலையத்துறையினர், யூனியன் தலைவர் அசோக்குமார், துணைத்தலைவர் பாலமுருகன், மாவட்ட கவுன்சிலர் சூரியமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். டி.ஜி.நடராஜசிவாச்சாரியார் தலைமையில் திரளான சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை தக்கார் அரவிந்தன், நிர்வாக அதிகாரி (பொறுப்பு) இராதாகிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள், கிராமத்தினர் செய்து வருகின்றனர்.