வரதராஜ பெருமாள் கோயிலில் கஜேந்திர மோட்சம்; வைகை ஆற்றில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2026 03:08
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் 4ம் ஆண்டு கஜேந்திர மோட்ச விழா நடந்தது.
எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான கோயிலில் நேற்று மாலை 4:00 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். மகாதீப ஆராதனை நடந்து கோயிலில் இருந்து புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக வைகை ஆற்று மண்டகப்படியில் அமர்ந்தார். ஆற்றில் கஜேந்திர மோட்ச லீலை கண்டருள மிகப்பெரிய குளம் அமைக்கப்பட்டு இருந்தது. இதன்படி ஸ்ரீமத் பாகவத புராணத்தில் உள்ளவாறு கஜேந்திரன் என்ற யானை குளத்தில் இறங்கி நீர் அருந்த செல்லும்போது முதலை அதனை தாக்க வருகிறது. அப்போது யானை பெருமாளை நோக்கி ஆதிமூலமே என வேண்டிய கனத்தில் தனது சக்கர ஆயுதத்தை விடுத்து முதலையிடமிருந்து யானையை காப்பாற்றியதாக புராணம் கூறுகிறது. ஆகவே பக்தர்கள் பெருமாளை நோக்கி சரணாகதி அடைந்தால் முக்தி அடைய முடியும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் கஜேந்திர மோட்ச லீலை நடந்து, வைகை ஆற்றில் இருந்து புறப்பட்டு இரவு 11:30 மணிக்கு பெருமாள் திருக்கோயிலை அடைந்தார். விழா குழுவினர், சபை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.