அனுவாவி சுப்பிரமணியர் கோயில் படிக்கட்டில் காட்டு யானை: பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2026 05:09
பெ.நா.பாளையம்: தடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயில் படிக்கட்டில் காட்டு யானை நடமாடியதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை வடக்கு புறநகர் பகுதிகளில் மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தடாகம் வட்டாரத்தில் வேட்டையன் என்ற ஒற்றை யானையின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று தடாகம் அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் படிக்கட்டில் ஒற்றை யானை நடந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக யாரும் படிக்கட்டில் இல்லாததால், அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. சிறிது நேரம், அதே பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை பின்னர் மலையடிவாரம் நோக்கி சென்றது.
இது குறித்து அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தர்கள் கூறுகையில், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கோயிலின் அடிவாரத்தில் இருந்து மேல் பகுதிக்கு செல்ல வின்ஞ் அமைக்க ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆய்வு பணியோடு அத்திட்டம் நின்றுவிட்டது. செயல்பாட்டுக்கு வரவில்லை. இப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால், வின்ஞ் போன்ற வசதிகள் இருந்தால், பக்தர்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் கோயிலுக்கு சென்று இறைவனை தரிசித்து விட்டு திரும்பலாம். தற்போதைய தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.