தொண்டாமுத்தூர்: கோவையில் நடந்த நிகழ்ச்சியில், நேபாளத்தில் உயிரிழந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபட்ட பின், நாடு முழுவதும் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும் என, விஷ்வ ஹிந்து பரிஷத் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் மிலிந்த் பராண்டே தெரிவித்துள்ளார்.
கோவையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அமைப்பு பொதுச்செயலாளர் மிலிந்த் பராண்டே இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார். இந்நிலையில், நாதேகவுண்டன்புதூரில் உள்ள கொங்கு காசி அஷ்ட பைரவர் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில், அவருக்கு கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சிவ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் தலைமையில், உலக மக்களின் நலன் வேண்டி, சங்கல்ப வேள்வியில் கலந்து கொண்டனர். அதன்பின், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அமைப்பு பொதுச்செயலாளர் மிலிந்த் பராண்டே, கோயிலில் உள்ள அஷ்ட பைரவர்களுக்கு அபிஷேகம் செய்தார். நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கு, கோயில் வளாகத்தில் மோட்ச தீபம் ஏற்றி, பிரார்த்தனை செய்தார். இதில், ஏராளமான பக்தர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.