ஜப்பானில் தருமபுரம் ஆதீனத்திற்கு சிறப்பான வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2026 03:09
மயிலாடுதுறை: ஐந்து நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள, தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானத்திற்கு, டோக்கியோ விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ஜப்பானியர்கள், இந்திய தேசியக் கொடியை மற்றும் ஜப்பானிய கொடிகளை ஏந்தி, ஹர ஹர மகாதேவா என்று வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. திருக்கடையூர் வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட 27 தேவஸ்தானங்கள் இந்த ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதன் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், இந்திய ஜப்பானிய ஆன்மீக கூட்டமைப்பு சார்பில், எட்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் உலக நல்லிணக்க கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, ஜப்பான் சென்றுள்ளார். அங்கே ஜப்பான் சைவ ஆதீனம் கும்பமுனிகள் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள், இந்தியா மற்றும் ஜப்பான் தேசிய கொடிகளை கைகளில் ஏந்தி, ஹர ஹர மஹாதேவா, ஓம் நமச்சிவாயா என்ற பஞ்சாட்சர மந்திரங்களை சொல்லி, தருமபுரம் ஆதீன குருமக சன்னிதானத்திற்கு வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளை தருமபுரம் ஆதீனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.