இளையான்குடியில் மாறநாயனார் குருபூஜை விழா, சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்பு.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2026 03:09
இளையான்குடி: இளையான்குடி நடைபெற்ற மாறநாயனார் குருபூஜை விழாவில் ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
63 நாயன்மார்களுள் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழா வருடம் தோறும் ஆவணி மாதம் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. இந்தாண்டிற்கான மாற நாயனார் குருபூஜை விழா சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்ட இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் ஞானாம்பிகை அம்மன் கோவிலில் உள்ள மாறநாயனார், புனிதவதி அம்பாள் சன்னதி முன்பாக இன்று காலை துவங்கியது. புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு ஹோமங்களை சிவாச்சாரியார்கள் வளர்த்தனர். பின்னர் சுவாமிகளுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. மூலவர் ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன்,மாறநாயனார், புனிதவதி அம்மன் உற்சவ மூர்த்திகளுக்கு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அலங்காரம்,ஆராதனைகள் நடந்தது. கரூர் சாமிநாத தேசிகர் குழுவினரின் திருமுறை இன்னிசை கச்சேரி நடைபெற்றது.இதனை தொடர்ந்து அன்னதானமும் நடந்தது.மாலை 6:00 மணிக்கு வள்ளலார் மாறநாயனார் என்ற தலைப்பில் சிராப்பள்ளி மாரியப்பனின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இரவு 8:30 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் ஜோதியாக காட்சியளித்ததை தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளில் சுவாமி வீதி உலா நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை மாறநாயனார் அடியார் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.இதே போன்று இளையான்குடியில் உள்ள மாறநாயனார் மடத்திலும் குருபூஜை விழா மற்றும் அன்னதானம் நடந்தது.