திருமலையில் மலையப்ப சுவாமிக்கு வெண்பட்டு குடைகள் சமர்ப்பிப்பு
பதிவு செய்த நாள்
19
செப் 2026 12:09
திருமலை: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட வாகன சேவையையொட்டி, தமிழக பக்தர்கள் சார்பில் 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகளை, இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்ஆர்.கோபால்ஜி, தேவஸ்தானத்தில் நேற்று சமர்ப்பித்தார். திருமலையில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோத்சவத்தில், தமிழகத்தில் இருந்து இரண்டு முக்கிய மங்கலப் பொருட்கள் காணிக்கையாக வழங்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, ஸ்ரீவில்லிபுத்-துார் ஆண்டாள் கோவில் மாலை; மற்றொன்று, சென்னையில் இருந்து பக்தர்களின் பிரார்த்தனைகளுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் படும் வெண்பட்டுத் திருக்குடைகள். அந்த வகையில், ஹிந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில், 22ம் ஆண்டு திருக்குடை ஊர்வலம், சென்னை பூக்கடை பகுதி சென்னகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. கர்நாடக மாநிலம் தீர்த்தஹள்ளி ஸ்ரீ பீமன்னா கட்டே மடத்தின் பீடாதி பதி ஸ்ரீ ரகுவரரேந்திர தீர்த்த சுவாமிகள் கொடியசைத்து, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அன்று மாலை கவுனியை கடந்து சென்ற திருக்குடைகளுக்கு, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு, ஆரத்தி எடுத்து வழிபட்டனர். ஐந்து நாள் பயணத்துக்கு பின், நேற்று முன் தினம் மாலை, திருப்பதியை ஊர்வலம் சென்றடைந்தது. அங்கு, திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவிலில் இரண்டு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட்டன. திருமலையில் வீதி உலா தொடர்ந்து, ஒன்பது திருக்குடைகள் நேற்று காலை திருமலைக்கு கொண்டு செல்லப்பட்டன. அவை, மாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பின், ஹிந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்ஆர்.கோபால்ஜி, ஒன்பது வெண்பட்டுத் திருக்குடைகளையும் தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். மலையப்ப சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களும் வழங்கப்பட்டன. இதையடுத்து, நிருபர்களிடம் ஆர்ஆர்.கோபால்ஜி கூறியதாவது: கடந்த 13ல் தொடங்கி, பல்வேறு பகுதிகளை கடந்து வந்த திருக்குடை ஊர்வலத்தில், 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள், தங்கள் பிரார்த்தனைகளை, திருக் குடைகள் மீது செலுத்தினர். கடந்த 17ல், இரண்டு குடைகள் திருச்சானுார் பத்மாவதி தாயார் சன்னிதியிலும், 18ல் ஒன்பது குடைகள் திருமலையிலும் சமர்ப்பிக்கப்பட்டன. பக்தர்களின் பிரார்த் தனைகளை மலையப்ப சுவாமி ஏற்றுக்கொண்டு அருள் புரிய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
|