செஞ்சி அருகே 800 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
பதிவு செய்த நாள்
21
செப் 2026 10:09
செஞ்சி: செஞ்சி அடுத்த போத்துவாய் கிராம மலைக்குன்றில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, பாண்டியர்களின் மீன் சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செஞ்சி அடுத்த போத்துவாய் கிராம விவசாயி ராஜி கொடுத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை அரசு கலைக்கல்லுாரி முன்னாள் முதல்வர் நெடுஞ்செழியன் தலைமையில், பேராசிரியர்கள் பன்னீர்செல்வம், சிவகுமார், ஆய்வாளர் விஷ்ணு, திரைப்பட இயக்குநர் ஞானபிரகாசம் உள்ளிட்ட குழுவினர் போத்துவாய் அருகில் உள்ள மலை குன்றில் ஆய்வு செய்தனர். குன்றின் அடிவாரத்தில், 10 அடி உயரமும், 25 அடி நீளமும் கொண்ட பாறையில் 20 வரிகளில் நீண்ட கல்வெட்டை கண்டறிந்தனர். இது இறித்து பேராசிரியர் நெடுஞ்செழியன் கூறியதாவது: இக்கல்வெட்டு, கி.பி., 12ம் நூற்றாண்டின் இறுதியில் மகதை நாட்டை ஆண்ட வாணர் குலச் சிற்றரசர் பொன்பரப்பின வாணகோவரையனின் வீரத்தையும் ஆற்றலையும் புகழ்ந்து பாடும் கல்வெட்டாக உள்ளது. “ஸ்வஸ்திஸ்ரீ இராசராச தேவனான பொன்பரப்பினான மகதைப் பெருமாள் கவி” என்ற தொடக்கத்துடன் மொத்தம் 18 பாடல்கள் இதில் பொறிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதியாக விளங்கிய வாணகோவரையன், சேரர், பாண்டியர், வடுகர், மலையர் ஆகியோரை போரில் வென்ற நிகழ்வுகளும், அவரது பிறந்த நாளான ‘திருவுத்திராடம்’ குறித்த தகவலும் இப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன. திருவண்ணாமலை கோவில் மற்றும் நார்த்தாம்பூண்டி கோவில்களில் சிதறிக் கிடந்த உதிரிப் பாடல்களின் முழுத் தொகுப்பாக இந்த கல்வெட்டு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கல்வெட்டின் அருகிலேயே பாண்டியர்களின் அடையாளச் சின்னமான செங்கோலுடன் கூடிய இரட்டை மீன் மற்றும் ஒற்றை மீன் வடிவங்களும் பாறையில் பொறிக்கப்பட்டுள்ளன. மதுரையில் பாண்டிய மன்னருக்கு மகுடம் சூட்ட வாணகோவரையன் உறுதுணையாக இருந்ததாகவும், இதற்காக மூன்றாம் குலோத்துங்க சோழன் அவருக்கு ‘பாண்டியன்’ என்ற பட்டத்தை வழங்கியதாகவும் வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. இதன் அடிப்படையில், சோழனால் வழங்கப்பட்ட பட்டத்தைப் பறை சாற்றுவதற்காகவோ அல்லது சோழர் ஆட்சியின் வீழ்ச்சிக்குப்பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை உணர்த்துவதற்காகவோ இந்த பாண்டியர் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு நெடுஞ்செழியன் கூறினார்.
|