ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் சிரமத்துடன் சென்றனர்.
வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கியதால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பு மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. மேலும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நான்கு ரதவீதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி அக்னி தீர்த்த கடலில் கலந்தது. இதில் ராமேஸ்வரம் மேல்தளம், கிழக்கு ரதவீதி சாலை வழியாக மழை நீர் கோயிலுக்குள் புகுந்தது. இதனால் கோயில் அம்மன் முகப்பு மண்டபம், முதல் பிரகாரத்திலும் மழைநீர் அரைஅடி உயரத்திற்கு தேங்கி கிடந்தது. இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்துடன் சுவாமி தரிசனம் செய்து வெளியேறினர். தேங்கிய மழைநீரை கோயில் ஊழியர்கள் மின் மோட்டார் மூலம் ஒரு சிலமணி நேரத்தில் அகற்றி சரி செய்தனர்.