பதிவு செய்த நாள்
11
பிப்
2013
11:02
செஞ்சி: மேல்மலையனூர், அங்காளம்மன் கோவிலில் நடந்த, தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், மூன்று லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அங்காளம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலை, 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு, 11:00 மணிக்கு, மேல்மலையனூரில் நிற்பதற்கு கூட இடமின்றி, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேற்கு வாசல், ஊஞ்சல் மண்டப எதிரில், நெரிசல் அதிகரித்தது. இதனால் வழக்கமாக நள்ளிரவு, 12:00 மணிக்கு துவங்கும் ஊஞ்சல் உற்சவம், 11:10 மணிக்கு துவக்கப்பட்டது. 12:30 மணிவரை ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. எஸ்.பி., மனோகரன், திண்டிவனம் ஆர்.டி.ஓ., மீனா பிரியதர்ஷினி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், ஜோதி, அறங்காவலர் குழு தலைவர், சின்னதம்பி மற்றும் அறங்காவலர்கள், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். வழக்கமாக, ஊஞ்சல் உற்சவத்தில், 1.5 லட்சம் பக்தர்கள் வரை கலந்து கொள்வர். நேற்று முன்தினம், தை அமாவாசை மற்றும் ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால், மூன்று லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர். ஊஞ்சல் உற்சவம் முடிந்ததும் இரண்டு மணி நேரத்தில் பக்தர்கள் கூட்டம் குறைந்து விடும். ஆனால், காலை வரை, கூட்டம் குறையாமல் இருந்தது.