அனுமன் சாலிசா பாடலுடன் லண்டனில் தீபாவளி கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2026 11:10
லண்டன்: இந்தியாவுடனான உறவை மிக வலுவான நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் உறுதியளித்துள்ளார். தனது முதல் தீபாவளி உரையில், பிரிட்டனின் வளர்ச்சியில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.
லண்டனில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் தெருவில் செவ்வாய்க்கிழமை மாலை தீபாவளி விழா நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பர்ன்ஹாம், தீபாவளியின் ஒளி மற்றும் நம்பிக்கை நிறைந்த உணர்வைப் போல, தனது தலைமையிலான தொழிலாளர் கட்சி அரசு மக்களின் வாழ்வில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தீபாவளி கொண்டாட்டம்: விழாவில் பாரம்பரிய முறைப்படி விளக்குகள் ஏற்றப்பட்டன. பக்தர்கள் அனுமன் சாலிசாவைப் பாடினர். அப்போது பிரதமர் பர்ன்ஹாமும் அவரது மனைவி மேரி-ஃபிரான்ஸ் வான் ஹீலும் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரிட்டனில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் தொடர்ந்து வலுப்பெற வேண்டும் என்றும், இந்திய வம்சாவளியினர் நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் கலாசார வளர்ச்சிக்கு அளித்து வரும் பங்களிப்பு மதிப்புக்குரியது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவுடனான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான உறுதியையும் அவர் தனது தீபாவளி உரையில் வெளிப்படுத்தினார்.