இமயமலை அடிவாரத்தில் 1,200 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்! கட்டிடக்கலையின் அற்புதம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2026 12:10
மணாலி: இமாச்சலப் பிரதேசத்தின் குலு பள்ளத்தாக்கில், மணாலிக்கு அருகிலுள்ள ஜகத் சுக் பகுதியில் அமைந்துள்ளது பழமையான மினியேச்சர் சிவன் கோவில். கி.பி. 8–9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில், பிரதிராகர் ஆட்சிக் காலத்தின் தொடக்ககட்டக் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அழகிய பள்ளத்தாக்குகள், உயர்ந்த பனிச்சிகரங்கள் சூழ அமைந்துள்ள ஜகத் சுக் பகுதி, பழமையான வீடுகள் மற்றும் நுட்பமான மர வேலைப்பாடுகளுக்கும் புகழ்பெற்றது.
ஏழு அடுக்கு கொண்ட கோபுர அமைப்பு: இந்தக் கோவில் சதுர வடிவக் கருவறையையும், அதற்கு மேலே ஏழு அடுக்குகளாக உயர்ந்து நிற்கும் சிகரத்தையும் கொண்டுள்ளது. இதன் கட்டிட அமைப்பு திரிரதா எனப்படும் தனித்துவமான வடிவமைப்பைப் பின்பற்றுகிறது. கோவிலின் சுவர்களில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் பிரதிராகர் காலக் கலை மரபை வெளிப்படுத்துகின்றன. பூர்ணகும்ப வடிவங்கள், பிரம்மா, சூரியன், விஷ்ணு ஆகிய தெய்வங்களின் திருவுருவங்கள் சுவர்களில் உள்ள சிற்ப மாடங்களில் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன.
மூன்று முக சிவபெருமான் : கோவிலின் முகப்பு மண்டபத்தின் மேல்பகுதியில் அமைந்துள்ள சுகநாசா பகுதியில் சிவபெருமானின் மூன்று முகங்கள் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன. முகப்பு மண்டபத்தின் கீழ்ப்பகுதியில் பத்மாசன நிலையில் அமர்ந்துள்ள லகுலீசரின் சிற்பமும் காணப்படுகிறது. மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள இக்கோவிலின் பிரதான மூர்த்தியாக சிவலிங்கம் அருள்பாலிக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சிறிய சிவன் கோவில், அதன் சிற்ப நுட்பம், கற்களால் உருவாக்கப்பட்ட கட்டுமானம் மற்றும் பிரதிராகர் காலக் கலை அம்சங்களால் வரலாற்று ஆர்வலர்களையும் பக்தர்களையும் கவர்ந்து வருகிறது.