மயிலாடுதுறையில் தீர்த்தவாரி: காவிரியில் தண்ணீர் இல்லாததால் போர்வெல் நீரில் புனித நீராடல்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2026 07:11
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நேற்று அமாவாசை தீர்த்தவாரி நடந்தது. பக்தர்கள் புனித புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச் சுமையின் காரணமாக கருமை நிறமாக மாறிய கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு பாவங்களை போக்கிக் கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. காசிக்கு நிகராக இத்தலம் போற்றப்படுகிறது அதன்படி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.
மாதம் முழுவதும் அஸ்திரதேவர் காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும். கடைசி 10 நாள் திருவிழாவின்போது சிவன் கோவில்களில் இருந்து சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு துலா கட்ட காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மாதம் 18ஆம் தேதி துலா மாதப் பிறப்பு தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் அமாவாசை தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதானேஸ்வரர் கோவில் மேதா தட்சிணாமூர்த்தி சுவாமி ஆண்டுக்கு ஒரு முறை ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கங்கை அம்மன் சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் காவிரி கரைக்கு எழுந்துள்ள தீர்த்தவாரி உற்சவம் நடப்பது வழக்கம். அதுபோல நேற்று அமாவாசையை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர், அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாரப்பர், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான படித்துறை காசி விஸ்வநாதர், தெப்பக்குளம் காசி விஸ்வநாதர், ஆகிய சுவாமிகள் காவிரியின் தென்கரையிலும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதானேஸ்வரர், கங்கை அம்மன் சமேத தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர் சுவாமிகள் பஞ்சமூர்த்தி களுடன் காவிரி வடக்கு கரையிலும் எழுந்துள்ளனர். தொடர்ந்து வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. காவிரியில் பக்தர்கள் நீராடுவதற்கு தண்ணீர் இல்லாததால் நகராட்சி சார்பில் போர்வெல் அமைக்கப்பட்டு தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் போர்வெல் நீரில் புனித நீராடினர். தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் மேதா தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். வரும் 13ஆம் தேதி திருக்கல்யாணம், 15ஆம் தேதி தேரோட்டம், 16ஆம் தேதி கடை முக தீர்த்தவாரி, 17ஆம் தேதி முடவன் முழக்கு நடைபெற உள்ளது.