உத்திரமேரூர் முருகன் கோவில் தேர் பணியை விரைந்து முடிக்க பக்தர்கள் வலியுறுத்தல்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2026 03:11
உத்திரமேரூர்: உத்திரமேரூர், முருகன் கோவிலில் புதிதாக செய்யப்படும் தேர் பணியை விரைந்து முடிக்க பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூரில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மாசி மாதத்தில், 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அவ்விழாவின் போது, தேரோட்டம் நடப்பது 40 ஆண்டுகளுக்கு முன் வரை வழக்கத்தில் இருந்தது.
இடையில் தேர் பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டுகளில் தேரோட்டம் இல்லாமல் திருவிழா மட்டும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இக்கோவிலுக்கு புதியதாக தேர் செய்ய கோவில் நிர்வாகம் மற்றும் அப்பகுதி பக்தர்கள் தீர்மானித்தனர். அதன்படி, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது பெரும் நன்கொடை உதவியோடு, 28 அடி உயரம் கொண்ட மரத்தேர் செய்யும் பணி 2024ல் தொடங்கியது. அப்பணி 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் சில மாதங்களாக பணி நடைபெறாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தேரோட்டம் குறித்து எதிர்பார்ப்பில் இருந்த பக்தர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். மேலும், புதிதாக செய்யும் தேரை சுற்றிலும் இரும்பு தகடு அமைத்திருந்தாலும் வெயில் மற்றும் மழைச்சாரால் சிதிலம் அடையும் நிலை உள்ளது. எனவே, வரும் மாசி மகோத்சவ விழாவின் போது தேர் திருவிழா நடைபெறும் வகையில் தேர் திருப்பணியை விரைந்து முடிக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.