தமிழ்தேசத்துக்கு அவரிடம் தான் ரொம்பப் பிரியம். அவரை தமிழ் தெய்வம் என்றே சொல்கிறோம். வைதாரையும் வாழ வைப்பவர்என்கிறோம். இந்த பாஷையில் அவருக்கென்று அருமையாக ஒரு பெயர் சூட்டியிருக்கிறோம்-முருகன். முருகு என்றால் அழகு. மன்மதன் எரிந்து போனதும், அவனுடைய கரும்பு வில்லையும், புஷ்ப பாணத்தையும் அம்பாளே எடுத்துக் கொண்டு காமேச்வரி ஆனாள். அதனால்தான் சுப்ரஹ்மண்ய அவதாரம் ஏற்பட்டது. அவளுக்குப் பேரே ஸுந்தரி, திரிபுரசுந்தரி. அவளுடைய பிள்ளையும் தாயைப்போல லாவண்யமாக தானே இருப்பார்! அழகு இருந்தால் போதுமா? நமக்கு வேண்டியது அருள். சுவாமி அழகு வடிவமாக இருக்கிறார் என்றால், அந்த அழகே அருள்வடிவம் தான். காருண்யம் தான் லாவண்யம். இரண்டும் வேறே வேறேயில்லை. சுப்ரஹ்மண்ய சுவாமி, தீன ஜனங்களுக்கெல்லாம் புகலிடமாக இருப்பவர். எளியவர்கள், கஷ்டப்படுகிறவர்கள், பயப்படுகிறவர்கள், தரித்திரர்கள் எல்லாரும் தீனர்கள் என்ற வார்த்தைக்குள் வந்து விடுவார்கள். அவர்களுக்கெல்லாம் துக்க நிவர்த்தி தரும் புகலிடமாக அவர் இருப்பதாலேயே அவர் தீனசரண்யராக விளங்குகிறார்.