பதிவு செய்த நாள்
22
பிப்
2013
04:02
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஆளவந்தார் என்பவர், தான் ஆட்சிசெய்த ராஜ்ய பரிபாலனத்தை விட்டுவிட்டு, ஸ்ரீரங்கத்தில் தங்கி துறவியாக மாறிவிட்டார். அவரது சீடர் பெரியநம்பி. பெரியதிருமலை நம்பி என்பவரும் ஆளவந்தாரின் சீடராக இருந்தார். இவர் ஆளவந்தாரை விட வயதில் மூத்தவர் என்றாலும், அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார். பெரியதிருமலை நம்பிக்கு காந்திமதி, தீப்திமதி என்று இரண்டு தங்கைகள் இருந்தனர். அவர்களில் பெரிய தங்கை காந்திமதியை, ஸ்ரீபெரும்புதூரில் வசித்த ஆசூரி கேசவாசாரியார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.இவரை ஸ்ரீமத் ஆசூரி ஸர்வக்ரது கேசவ தீட்சிதர் என்று மக்கள் அழைத்தனர். தீப்திமதியை, அகரம் என்ற கிராமத்தில் வசித்த கமலநயனப்பட்டர் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்தை நடத்திய பிறகு, நிம்மதியடைந்த பெரியதிருமலை நம்பி, எந்நேரமும் பெருமாளின் திருவடிகளையே எண்ணி தியானத்தில் ஆழ்ந்து கிடந்தார். ஆசூர் கேசவாசாரியார் காந்திமதி தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இவர்களுக்கு இது பெரும் மனக்குறையாக இருந்தது. உடனே அவர்கள் தற்போதைய சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் சென்று அவர்கள் மகப்பேறு குறித்த வேள்விகளைச் செய்தனர். இதன் பிறகு, கேசவாசாரியார் ஓய்வெடுக்க ஓரிடத்தில் அமர்ந்தார். கண்களைச் சுழற்றவே தூங்கி விட்டார். அப்போது, பார்த்தசாரதி பெருமாள் கனவில் குழந்தை இல்லா கவலை இனி உமக்கு தேவையில்லை. நானே உமக்கு குழந்தையாகப் பிறப்பேன். உம் விருப்பம் விரைவில் நிறைவேறும், என்றார்.
காந்திமதி அம்மையார் கர்ப்பவதியானார். கலியுகம் 4118, ஆங்கில ஆண்டு 1017, சித்திரை 12, வியாழன், திருவாதிரை, வளர்பிறை பஞ்சமியன்று அவதரித்தது அந்தத் தெய்வக்குழந்தை. இதனிடையே, காந்திமதி அம்மையாரின் தங்கையான தீப்திமதிக்கும் ஆண்குழந்தை பிறந்தது. அக்காவின் குழந்தையைப் பார்க்க தங்கை தீப்திமதி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். தங்கள் இருவருக்கும் ஆண்குழந்தை பிறந்ததில் அவர்களுக்கு பரம சந்தோஷம். தங்கைகளுக்கு குழந்தை பிறந்த செய்தியறிந்த பெரிய திருமலை நம்பி ஸ்ரீபெரும்புதூர் வந்தார். காந்திமதியின் குழந்தை லட்சுமணனின் அவதாரம் என்பது புரிந்தது. எனவே, குழந்தைக்கு ராமானுஜன் என்று பெயர் வைத்தார்.
திருமலையில் (திருப்பதி) பெரிய திருமலை நம்பி வெங்கடாசலபதிக்கு தொண்டு செய்து கொண்டிருந்தார். அவருக்கு ராமானுஜர் எழுதிய கடிதத்தில், தாங்கள், காளஹஸ்தியில் சிவப்பணியில் ஈடுபட்டுள்ள என் தம்பி கோவிந்தனுக்கு தக்க அறிவுரை சொல்லி ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பி வையுங்கள், என குறிப்பிட்டிருந்தார். பெரிய திருமலை நம்பி கோவிந்தரை சந்திக்கச் சென்றார். கோவிந்தர் அங்குள்ள குளக்கரையில் தினமும் மலர் பறிக்க வருவார். ஒருநாள் வெண்தாடியுடன் வைணவப் பெருமகனார் ஒருவர் குளக்கரையில் தன் சீடர்களுக்கு, பல்வேறு சாஸ்திரங்கள் குறித்து போதனை செய்து கொண்டிருந்தார். கோவிந்தன் ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டார். அந்தப் பெரியவரின் பேச்சு அவரை மிகவும் கவர்ந்தது. பின்னர் மரத்தில் இருந்து இறங்கி, மலர்களுடன் அவர் இருந்த இடத்தைக் கடந்து சென்றார். வயதில் மிகவும் சிறியவராயினும் கூட பெரிய திருமலை நம்பி கோவிந்தனை. மகாத்மாவே, இங்கு வாருங்கள் என மரியாதையுடன் அழைத்தார். கோவிந்தனும் பணிவுடன் அவர் அருகே சென்றார். இருவருக்கும் அருமையான உரையாடல் நிகழ்ந்தது. சுற்றியிருந்தவர்களுக்கு தேனாய் இனித்தது அந்த உரையாடல். விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களின் பெருமையை நாவினிக்க அவர்கள் பேசினர். தம்பி! இந்த பூக்களை யாருக்கு கொண்டு செல்கிறீர்கள்? என்றார் பெரியவர். சுவாமி! சிவனை வழிபடுவதற்காக இதனைப் பறித்துச் செல்கிறேன், என்றார் கோவிந்தன். நம்பி: சிவனுக்கு பூ வழிபாடு சரியாக இருக்காது. அவர் ஆசைகளை வேரறுத்து எரித்து அதனை வெண்ணீறாக பூசியிருப்பவர் அல்லவா? அவருக்கு இந்த பூக்களின் மீது ஆசையிருக்க வாய்ப்பில்லை. மேலும் அவர் மயானத்தில் வசிப்பவர். நாராயணன் மீது அபிமானம் உள்ளவர். இந்த பூக்கள் கல்யாண குணங்கள் கொண்ட திருமாலுக்கு தானே பொருத்தமாக இருக்க முடியும்?
கோவிந்தன்: பெரியவரே! தாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். இறைவன் என்பவன் எல்லாம் உடையவன். அவன் தான் நமக்கு கொடுப்பவனே ஒழிய, நம்மால் பக்தியை மட்டுமே அவனுக்கு திருப்பி செலுத்த இயலும். சிவன் விஷத்தைக் குடித்து உலகத்தைக் காத்தவர். அவருக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும். அதற்கு இந்த மலர்களும் தேவையில்லாமல் இருக்கலாம். வெறும் வணக்கம் மட்டுமே போதும். உள்ளத்தில் இருந்து பக்தி பூக்களைச் சொரிந்தால் போதும். இருப்பினும் மலர் தூவி வழிபடும் சம்பிரதாயம் மூலம் பக்தி வளருமென்று கருதுகிறேன் பெரியவரே.
நம்பி: நீங்கள் சொல்வது மிகமிக சரி. அறிஞர்கள் மட்டுமே இவ்வாறான கருத்தைக் கூற முடியும். உன் பக்தி மெச்சத்தகுந்தது. பகவான் ஹரி வாமனனின் தான் என்ற அகந்தையை அடக்க வந்தவர். அவரிடமே நம்மை ஒப்படைக்க வேண்டும் என்பதே என் கருத்து. அது மட்டுமல்ல. கீதையில் பகவான் ஒருவன் அவனது சொந்த தர்மத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என சொல்லியுள்ளார். அதன்படி பார்த்தால், நீங்கள் பகவான் ஹரியை வழிபடுவதே முறையானது.
கோவிந்தன்: திருமாலுக்கும், சிவனுக்கும் தாங்கள் பேதம் கற்பிக்க வேண்டாம். கண்டாகர்ணன் என்ற பக்தனின் கதை தங்களுக்கு தெரியாததல்ல. அவனைப் போன்ற பக்தியுள்ளவன் என என்னை எண்ணாதீர்கள். கண்டாகர்ணன் சிவனை மட்டுமே வழிபட்டான். சிவன் அவனை திருத்த எண்ணி, நாராயணனின் உடலைத் தன்னோடு சேர்த்து, சங்கர நாராயணனாக காட்சியளித்தார். அப்போதும் அவன் சிவன் இருந்த பகுதியை மட்டுமே வணங்கினான். தான் காட்டிய தூபத்தின் வாசனை சிவனின் பக்கமே செல்லும் வகையில் விசிறினான். இதற்காக சிவன் அவனை தண்டித்து ஒரு கிராமத்தில் துன்பம் நிறைந்த வாழ்க்கையைக் கொடுத்து வாழ வைத்தார். என்ன துன்பம் தெரியுமா? ஒரு வைணவக் கிராமத்தில் தங்க வைத்தார். அங்கிருந்தவர்கள் விஷ்ணுவைப் புகழ்ந்து பாடினர். அப்போதும் திருந்தாத அவன் தன் காதுகளில் கண்டாவைக் (மணி) கட்டிக் கொண்டு, விஷ்ணு என்ற சப்தம் விழாமல் இருக்க அடித்துக் கொண்டே இருந்தானாம். இப்படிப்பட்ட ஒரு சார்ந்த பக்தி தேவையில்லை எனக் கருதுகிறேன். இப்படியாக அவர்களின் உரையாடல் தினமும் தொடர்ந்தது. பெரிய திருமலை நம்பி, கோவிந்தனை விடுவதாக இல்லை.
ஒரு வழியாக கோவிந்தனின் மனதை மாற்றிய பெரிய திருமலைநம்பி, அவரை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். ராமானுஜரின் சீடராகிவிட்டார் கோவிந்தன். கோவிந்தன் தனது அருகில் இருந்ததால் ராமானுஜருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. காலப்போக்கில் ஸ்ரீமன் நாராயணனையே கோவிந்தன் வழிபட ஆரம்பித்தார்.