பதிவு செய்த நாள்
27
பிப்
2013
11:02
புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்று, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசித்திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா மார்ச், 3ம் தேதி துவங்குகிறது. 18ம் தேதி வரை, விழா தொடர்ந்து, 16 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச், 11ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி, கடந்த, 24ம் தேதி இரவு துவங்கி, அடுத்தநாள் அதிகாலை வரை நடந்தது. புதுக்கோட்டை நகர் மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில், பூத்தட்டுகள் எடுத்துவந்து அம்மன் சன்னதி முன்பு குவித்தனர். மலைபோல் குவிந்த பூக்களை கொண்டு இரவு விடிய, விடிய அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் அரசுத்துறை அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.