பதிவு செய்த நாள்
27
பிப்
2013
11:02
மோகனூர்: பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் தூக்குத் தேர்த்திருவிழா, இன்று உள்ளூர் சுற்றுடன் கோலாகலமாக துவங்குகிறது. மோகனூர் அடுத்த, ஒருவந்தூரில் பிரசித்தி பெற்ற பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா கடந்த, 20ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. இன்று, (ஃபிப்., 27) எடுத்துக்கட்டு சாவடியில் இருந்து கொண்டுவரப்பட்ட திருத்தேரில், அதிகாலை, 5 மணிக்கு ஸ்வாமி எழுந்தருளுகிறார். தொடர்ந்து, தூக்கு தேரை பக்தர்கள் எடுத்துக் கொண்டு, உள்ளூரை வலம் வருகின்றனர். ஒருவந்தூரில் உள்ள அனைத்து வீதிகள் வழியாக செல்லும் ஸ்வாமிக்கு, பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபடுகின்றனர். தொடர்ந்து, கிடா வெட்டி அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். நாளை (ஃபிப்., 28) ஒருவந்தூர்புதூர் தெற்கு, வடக்குதெரு, செல்லிபாளையம், கணபதிபாளையம், தொட்டிப்பட்டி, நொச்சிப்பட்டி, ஓடக்காட்டூர், குஞ்சாயூர், நல்ல செல்லிபாளையம் ஆகிய கிராமங்களுக்கு தேர் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு, ஸ்வாமிக்கு பக்தர்கள் கிடாவெட்டி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மார்ச், 1ம் தேதி இரவு, 7 மணிக்கு எடுத்துக்கட்டு சாவடியில் இருந்து ஸ்வாமி உள்ளூர் சுற்றி பூஜை செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து, கோவிலுக்கு குடிபுகுதல், கிடாவெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதில், பாரம்பரிய முறைப்படி பேட்டப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் சரவணனை, குதிரையில் அழைத்து வந்து சிறப்பு மரியாதை செய்கின்றனர். தொடர்ந்து கிடாவெட்டும், வாணவேடிக்கையும் நடக்கிறது. மார்ச், 5ம் தேதி மாலை, 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சுப்ரமணியம், ஒருவந்தூர் பஞ்சாயத்து தலைவர் செல்ல ராஜாமணி, நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.