பதிவு செய்த நாள்
28
பிப்
2013
11:02
நித்திரவிளை: கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன் திருக்கோயில் தூக்கத் திருவிழா ஏப்ரல் மூன்றாம் தேதி துவங்கி, 12ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. குமரி மாவட்டம், கேரள எல்லையை ஒட்டி காணப்படும் கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில், தேவி கோயில்களில் தனிச்சிறப்பு பெற்றது. கேரள கலாச்சாரத்தை ஒட்டியே இக்கோயிலின் வழிபாட்டு முறைகள் உள்ளன. கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு இரண்டு கோயில்கள் உள்ளன. ஒரே வழிபாட்டு முறை கொண்ட அம்மனுக்கு இங்கு மட்டுமே இரண்டு கோயில்கள் உள்ளன என்பது மற்றுமொரு சிறப்பாகும். கொல்லங்கோடு கண்ணனாகம் ஜங்ஷனில் இருந்து மேற்கிலும், கிழக்கிலும் இக்கோயில்கள் அமைந்துள்ளன. மேற்கு நோக்கி 500 மீட்டருக்கு அப்பால், வட்டவிளையில் மூலக்கோயில் உள்ளது. கிழக்கு நோக்கி 500 மீட்டருக்கு அப்பால், வெங்கஞ்சியில் திருவிழா கோயில் உள்ளது இன்னொரு சிறப்பம்சமாகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பரணியை முன்னிட்டு, 10 நாட்கள் நடக்கும் தூக்கத் திருவிழாவிற்காக அம்மன் மூலக்கோயிலில் இருந்து, திருவிழா கோயிலுக்கு எழுந்தருளுவார். அதுபோல, மகர விளக்கை முன்னிட்டு, 41 நாட்கள் நடக்கும் மண்டல கால சிறப்புப் பூஜைக்கும் அம்மன் எழுந்தருளுவார். தமிழகத்தில், கொல்லங்கோடு, மூவோட்டுக்கோணம், இட்டகவேலி உள்ளிட்ட ஒருசில கோயில்களில் மட்டுமே பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது.
குழந்தை பாக்கியம் வேண்டியும், பெற்ற குழந்தைகள் நோய் நொடியின்றி, நல்லறிவு பெற்று, நீண்டகாலம் வாழவும், அம்மனை வேண்டி தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. 40 அடி உயரம் கொண்ட இரண்டு வில்கள் பூட்டப்பட்ட ரதத்தில், ஒவ்வொரு வில்லிலும் இரண்டு தூக்கக்காரர்கள் என, நான்கு பேர் கையில் ஒவ்வொரு குழந்தையுமாக, ஒரே நேரத்தில் எட்டு பேர் ரதத்தில் கோயிலை ஒருமுறை சுற்றி வரும் போது, தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. இந்த ஆண்டைய பங்குனி பரணி தூக்கத் திருவிழா, வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில், மகாராஷ்டிர ஆளுநர் கலந்து கொண்டு விழாவைத் துவக்கி வைக்கிறார். முன்னதாக அன்று மாலை, அம்மன் வெங்கஞ்சி திருவிழா கோயிலுக்கு எழுந்தருளுவார். மூன்றாம் நாள் விழாவில், தூக்க நேர்ச்சைக்கான குழந்தைகளின் பெயர் பதிவு நடக்கிறது. நான்காம் நாள் விழாவில் தூக்க நேர்ச்சை குழந்தைகள் குலுக்கல் முறையில் வரிசைப்படுத்துதல் நடக்கிறது. மேலும், விரதமிருந்து தூக்கக்காரர்கள் நடத்தும் நமஸ்காரமும் நடக்கிறது. ஒன்பதாம் நாள் விழாவில் தூக்க நேர்ச்சைக்கு ஆயத்தமாக “வண்டியோட்டம்’ என்னும் தூக்க ரதத்தின் சோதனை ஓட்டம் நடக்கிறது. பத்தாம் நாள் விழாவில் காலை ஆறு மணி முதல் தூக்க நேர்ச்சையுடன் தூக்கத் திருவிழா நடக்கிறது. மேலும், விழா நாட்களில் சமய சொற்பொழிவு, கதகளி, நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சி நடக்கிறது. திருவிதாங்கூர் மகாராணி அஸ்வதி திருநாள், தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால், கேரள சுகாதாரத்துறை மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சிவகுமார் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.ப.எஸ்., அதிகாரிகள் விழா நாட்களில் கலந்துகொண்டு சிறப்பக்கிறார்கள். விழா ஏற்பாடுகளை, கொல்லங்கோடு பத்ரகாளி தேவசம் கமிட்டி தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் மோகன் குமார், துணைத்தலைவர் அப்புக்குட்டன், துணைச்செயலாளர் சுகுமாரன், பொருளாளர் சனல் குமரன் மற்றும் உறுப்பனர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.