பதிவு செய்த நாள்
28
பிப்
2013
11:02
ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி அங்காள பரமேஸ்வரி கோயில் (மாதாங்கோவில்) மகா சிவராத்திரி விழா நாளை (1ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கி 11நாட்கள் நடக்கிறது. ஆழ்வார்குறிச்சியில் அம்பாசமுத்திரம் - தென்காசி மெயின்ரோட்டில் அங்காள பரமேஸ்வரி (மாதாங்கோவில்) உள்ளது.கோயிலில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெறும். இந்தாண்டு நாளை (1ம்தேதி) காலை கணபதி ஹோமம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கொடியேற்றுதலுடன் துவங்குகிறது. இரவு நடராஜர் அம்பாள் அபிஷேகமும்,தீபாராதனையும், நடராஜர் அம்பாள் திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து 2, 3, 4ம் திருநாட்களில் தினமும் இரவு நடராஜர் அம்பாள் அபிஷேகம், தீபாராதனை மற்றும் திருவீதி உலா நடக்கிறது. 5ம் திருநாளன்று மாலை 6மணியளவில் விக்கிரமசிங்கபுரத்தில் மாதா முகக்கப்பரை ஊர்வலம் நடக்கிறது. 8ம் திருநாளன்று இரவு 8மணியளவில் அம்பாள் கொலு தரிசனமும், அலகுக்கு காப்பு கட்டுதல் வைபவமும் நடக்கிறது. 9ம் திருநாளன்று ஆழ்வார்குறிச்சியில் மாலை 6மணியளவில் மாதா முகக் கப்பரை ஊர்வலம் நடக்கிறது. 10ம் திருநாளான மகா சிவராத்திரி நாளன்று காலை நடராஜர் அம்பாள் திருவீதி உலாவும், மாலை 4மணியளவில் அலகு குடம் பூஜை, திருவிளக்கு தீப பூஜையும், மாலை 5 மணியளவில் சிவசக்தி விநாயகர் கோயிலில் இருந்து அலகு, அலகு குடம், பால்குடம், தீச்சட்டி, மாவிளக்கு கோயிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வருவர்.
முதல் கால பூஜையில் யாகசாலை ஹோமம், கலச பூஜை ஆரம்பம், சிறப்பு அபிஷேகமும், மகாசிவராத்திரி யாகசாலை கும்பாபிஷேகத்தினை அம்பாசமுத்திரம் சோமாஸ் கந்தசாமி குருக்கள் நடத்துகிறார். பின்னர் 2, 3ம் கால பூஜைகளும், இரவு 10 மணியளவில் கோயிலில் இருந்து நடராஜர் அம்பாள் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் தெப்பக்குளத்திற்கு புறப்படுதலும், இரவு 2 மணியளவில் தெப்பக்குளத்தில் இருந்து அலகு தீர்த்தத்துடன் கோயிலுக்கு செல்லுதலும், 4ம் கால பூஜையில் அலகு காட்சி தரிசனமும் நடக்கிறது. சிவராத்திரி நாளன்று இரவு சிறப்பு நிகழ்ச்சியாக நெல்லை சங்கீதன் குழுவினரின் இன்னிசை விருந்தும், அன்னதானமும் நடக்கிறது. 11ம் திருநாளன்று காலை நடராஜர் அம்பாள் தீர்த்தவாரியும், இரவு 7மணிக்கு கலச பூஜை, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடக்கிறது. இரவு பேச்சியம்மன், கருப்பசாமிக்கு கொடைவிழா நடக்கிறது. பூஜைகளை தலைமை அர்ச்சகர் கணேசகுருசாமி, உதவி அர்ச்சகர் குட்டி, சுப்பையா ஆகியோர் நடத்துகின்றனர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் கணபதி மேற்பார்வையில் விழாக்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.