ஆதிசேஷன் என்னும் ஆயிரம் தலை கொண்ட பாம்பணையில் விஷ்ணு பள்ளி கொண்டு இருக்கிறார். பெருமாள் எப்போது எப்படி எதிர்பார்க்கிறாரோ அப்படியெல்லாம் மாறிவிடும் பணியாளாக இவர் விளங்குகிறார். சேஷன் என்பதற்கு பணிவிடை செய்பவன் என்பது பொருள். பணியாட்களில் முதல்வர் என்பதால் ஆதிசேஷன் என்று அழைக்கப்படுகிறார். பகவான் துயிலும் போது பாம்பணையாகச் சுற்றி படுக்கையாக இருக்கிறார். நடக்கும் போது குடைபோல நிழல் தருகிறார். உட்காரும்போது ஆசனமாகத் திகழ்கிறார். நின்றால் பாதுகையாக பாதம்வைக்க ஏதுவாகிறார்.