பதிவு செய்த நாள்
08
மார்
2013
10:03
நாகலாபுரம்: நாகலாபுரம் வேதநாராயணசாமி கோவிலில் உள்ள ரகசிய அறையில் இருந்து, 20 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. ஊத்துக்கோட்டை அடுத்த, நாகலாபுரத்தில் வேதநாராயணசாமி கோவில் உள்ளது. மன்னர் கிருஷ்ண தேவராயர், தன் தாயார் நாகமாம்பாள் நினைவாக இக்கிராமத்தை நிர்மாணித்தார். இக்கிராமத்தில், 12.5 ஏக்கர் பரப்பளவில் வேதநாராயணசாமி கோவிலை கட்டினார். இக்கோவிலில், மூலவர் மச்ச அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் சூரிய பூஜை நடைபெறும். அன்று, சூரியன் ஒளிக்கதிர்கள், உற்சவரின் நெற்றி, வயிறு, பாதம் ஆகிய மூன்று இடங்களில் தெரியும். இக்கோவிலில், கடந்த, 2001ம் ஆண்டு, கோபுரத்தின் வலது புறத்தில் உள்ள அலுவலக அறை அருகே, டெலிபோன் கேபிள் பதிப்பதற்காக தோண்டிய போது, ரகசிய அறை இருப்பது தெரிய வந்தது. அதில் இருந்து, 14 கற்சிலைகள் கண்டு எடுக்கப்பட்டன. இந்நிலையில், கோபுரத்தின் இடது புறத்திலும் ஒரு ரகசிய அறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஏதாவது பொக்கிஷங்கள் இருக்கக்கூடும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்த ரகசிய அறை நேற்று திறந்து பார்க்கப்பட்டது. அப்போது, அதில் இருந்து, 20 கற்சிலைகள் கண்டு எடுக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் போது, தாசில்தார் வெங்கடராஜுலு, திருமலை அருங்காட்சியக அதிகாரி விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.