பதிவு செய்த நாள்
08
மார்
2013
10:03
குன்றத்தூர்: பரணிபுத்தூரில், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி, கழிவு நீர் குளமாக மாறி வரும், பிரம்மதீர்த்தக் குளத்தை, இந்து சமய அறநிலையத் துறையினர் சீரமைக்க வேண்டும், என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குன்றத்தூர் ஒன்றியம், பரணிப்புத்தூர் ஊராட்சியில், திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு அருகே மூன்றரை ஏக்கர் பரப்பளவில், பிரம்ம தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. திருமணத்தடை மற்றும் தீராத நோய் உள்ளவர்கள், பிரம்ம தீர்த்தக் குளத்தில் நீராடி, இறைவனை வணங்கினால், குறைகள் நிவர்த்தியாகும் என, நம்பப்படுகிறது. இப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டு வந்தனர்.
ஆக்கிரமிப்பு: முறையான பராமரிப்பு இல்லாததால், சிலர் குளத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர். வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலக்கிறது. இதனால் குளம், கழிவு நீர் தேக்கமாக மாறி விட்டது. குளம் முழுவதும் கோரைப்புற்கள், ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால் குளத்தின் நீரை பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பராமரிக்க வேண்டும்: இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: கோவிலும் குளமும் எவ்வித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம் குத்தகைதாரர்களிடம் உள்ளது. பதிவேட்டில் 3.61 ஏக்கர் நிலத்தில் கோவில் குளம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது குளத்தை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் குளத்தின் பரப்பு குறைந்துவிட்டது. இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு தெரிவித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டும். குத்தகை பணம் மூலம் கோவிலை பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.