திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் 22 உண்டியல்களில் ரூ.9 லட்சத்து 95 ஆயிரத்து 186 காணிக்கையாக கிடைத்து.நெல்லையப்பர் கோயிலில் 3 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் திறந்து எண்ணப்படுவது வழக்கம். கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதிக்கு பிறகு நெல்லையப்பர் கோயில் மற்றும் அதற்குட்பட்ட உப கோயில்களில் உள்ள 22 உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன. அறநிலையத்துறை துணை ஆணையர் பழனிக்குமார் மேற்பார்வையில் ஆய்வர்கள் ஆனந்த், கவிதா, செயல் அலுவலர் யக்யநாராயணன், கோயில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.9 லட்சத்து 95 ஆயிரத்து 186 காணிக்கையாக கிடைத்தது. சாதாரணமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.3.50 லட்சம் வரை உண்டியல் காணிக்கை இருக்கும். ஆனால் சாராசரியாக ரூ.4.50 லட்சம் காணிக்கை வசூல் ஆகியுள்ளது. இது கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை காட்டுவதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதவிர 16 கிராம் தங்கம், 65 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது.