அபிராமி அம்மன் கோயிலில் பாலாலயம்: அத்திரமர சிலைகள் தற்காலிக கோயிலில் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2013 10:03
திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணியை முன்னிட்டு நடத்தப்படும் யாகத்திற்கு பின்பு அத்திரமரத்தில் வடிவமைக்கப்பட்ட சுவாமி சிலைகள் மற்றும் சித்திரங்கள் நித்யகால பூஜைக்காக காசிபிள்ளை பேட்டை பகுதியில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.பிரசித்தி பெற்ற திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி துவக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நடத்தப்பட்ட ஸ்ரீருத்ரயாகத்திற்கு பின்பு இரண்டாவதாக பாலாலயம் நேற்று துவங்கியது.திருப்பணி முடிவடையும் வரை நித்யகால பூஜைக்காக வெள்ளை விநாயகர் கோயில் அருகில் உள்ள காசிபிள்ளை பேட்டையில் தற்காலிக கோயில், திருப்பணிக்குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக காளகத்தீஸ்வரர், ஞானாம்பிகை, பத்மகிரீஸ்வரர், அபிராமி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, விநாயகர், சுப்பிரமணியன், சண்டிகேஸ்வரர், பைரவருக்கான சிலைகள் அத்திரமரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.இது தவிர கோயிலில் உள்ள நவக்கிரகங்கள், நாயன்மார்கள் மற்றும் சிறிய அளவிலான அனைத்து சுவாமிகளின் உருவங்கள் அத்திமரத்தில் சித்திரமாக வரையப்பட்டுள்ளன. திருப்பணி முடிவடையும் வரை அத்திமரத்திலான சுவாமி சிலைகள் மற்றும் சித்திரங்களுக்கு தெய்வீக சக்தியை ஏற்படுத்துவதற்கான பாலாலயம் இன்று (மார்ச் 15) காலை 6 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜையுடன் துவங்குகிறது. யாகத்தின் அருகில் வைக்கப்பட்டிருக்கும் குடங்களில் உள்ள தீர்த்தம் தற்காலிகமாக வடிவமைக்கப்பட்டுள்ள அத்திமரத்திலான சுவாமி சிலைகள் மீது ஊற்றப்பட்டு காசிபிள்ளை பேட்டையில் பிரதிஷ்டை செய்யப்படும்.திருப்பணி நிறைவடையும் வரை அபிராமி அம்மன் கோயிலில் உள்ள அனைத்து சிலைகளும் அருகில் உள்ள சிருங்கேரி மடத்தில் பாதுகாக்கப்படும்.