சமஸ்கிருதத்தில் குரு என்ற சொல்லை அப்பாவுக்கு ஒரு பட்டமாக வழங்குவார்கள். குரு பட்டம் என்று சொல்வதுண்டு. அம்மா செல்லம் தருபவள். அப்பா கண்டிப்புக்காரர். ஒரு வீட்டில் அன்பும் இருக்க வேண்டும். அதுவே அதிகமாகிப் போனால் செல்லமாகி, பிள்ளை கெட்டுப்போக வாய்ப்புண்டு. அந்த சமயங்களில் அப்பா கண்டிப்பு என்னும் கடிவாளத்தை இட்டு, அந்தச் செல்லக்குழந்தையை சரியான பாதையில் செல்ல வைப்பார். அக்காலத்தில் குரு என்பவர், ஒரு பறவையைப் போல குழந்தைகளைப் பராமரிப்பார். ஒரு பறவை முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சுகளை உற்பத்தி செய்வது போல, குரு என்பவர் தன் மாணவனை ஞானக்கல்வி என்னும் கருவியால் அடைகாத்து, ஆணவ ஓட்டை உடைத்து, அவனை கடவுளை அடையும்படியாக வழிகாட்டுவார். இன்றைய தினம் குருவானவர் தொழிற்கல்வியை போதித்து, சிறந்த பணிக்குச் செல்ல வழிகாட்டுகிறார். காலத்தின் கட்டாயத்தால் இந்த மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், ஒரு குரு தந்தை ஸ்தானத்தில் இருந்து இவற்றையெல்லாம் செய்து மாணவர்களை வழிநடத்துகிறார்.