பதிவு செய்த நாள்
25
மார்
2013
04:03
கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் தமிழகத்தை சேர்ந்த சங்கீத வித்வான் ஸ்ரீ செம்பை வைத்யநாத பாகவதர் அவர்களின் உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது. கேரள கோயிலில் தமிழகத்தை சேர்ந்த மகானின் படம் இருப்பது எப்படி என்றால். சிறந்த பாடகரான செம்மை வைத்தியநாத பாகவதர் திருசெங்கோட்டில் ஒரு கச்சேரியில் பாவன குருபவன புராதீச மாஸ்ரயே என்று பாடிக் கொண்டிருந்தார். திடீரென அவரது தொண்டை அடைத்துக் கொண்டது. எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் அதற்கு மேல் பாட முடியவில்லை. அவரது சிஷ்யர்கள் அவரை பல வைத்தியர்களிடம் அழைத்துச் சென்றனர் இருந்தும் ஒரு பயனும் இல்லை. எல்லா வைத்தியர்களும், அவர் தொண்டையில் ஒரு பிரச்சனையும் இல்லை. அது எப்படி நின்று போனதோ அப்படியே வந்துவிடும் என்று கூறிவிட்டனர். அதன் பின் அவர் கச்சேரி செய்வதே நின்றுபோனது.
திடீரென்று அவருக்கு நாம் குருவாயூரப்பனைப் பற்றிப் பாடியபோதுதானே நம் குரல் நின்று விட்டது. அந்த குருவாயூரப்பனையே வேண்டிக் கொள்வோம் என்று நினைத்து குருவாயூருக்கு வந்தார். குருவாயூரப்பன் சன்னதியில் நின்று, குருவாயூரப்பா, நீ கொடுத்த தொண்டை இது. அன்று நான் எந்த இடத்தில் பாட்டை விட்டேனோ அந்த இடத்தில் இப்பொழுது எனக்குப் பாட வரணும். அப்படி எனக்குப் பாட வந்தால், இனிமேல் நான் என் வாழ்நாள் முழுவதும் கச்சேரி பாடி கிடைக்கும் எல்லா சம்பாதியத்தையும் உனக்கே சமர்ப்பிக்கிறேன் என்று வேண்டிக் கொண்டார். அடுத்த நிமிடமே அவர் எந்த இடத்தில் அந்த கீர்த்ததனையைப் பாடி விட்டாரோ அந்த இடத்தில் இருந்து பாட ஆரம்பித்து விட்டார். அன்றிலிருந்து அவர் குருவாயூரப்பனின் பக்தன் ஆகிவிட்டார். அன்றுமுதல் தன் சம்பாத்தியம் எல்லாவற்றையும் குருவாயூரப்பனுக்கே அர்ப்பணித்து வந்தார். ஒவ்வொரு கார்த்திகை மாத ஏகாதசிக்கும் குருவாயூர் வந்து கச்சேரி செய்தார். இன்றும் கார்த்திகை மாதம் வரும் ஏகாதசிக்கு குருவாயூர் ஏகாதசி என்று பெயர். அப்போது நடக்கும் பத்து நாள் உற்சவத்தை செம்மை பண்டிகை என்றே கூறுகின்றனர். அந்த சமயம் பிரபல பாடகர்கள் வந்து பாடுவார்கள். இதன் காரணமாகத்தான் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் செம்பை வைத்தியநாதர் படம் மாட்டப்பட்டிருக்கிறது.