பதிவு செய்த நாள்
28
மார்
2013
02:03
அடிப்பது போல கோபம் வரலாம் ஆனால் ஆபத்து வரக்கூடாது!
இறைவனின் திருநாமத்தையும் மகிமையையும் எப்போதும் பாடுவதுடன் பிரார்த்தனையும் செய்ய வேண்டும். விவேகத்தையும், வைராக்கியத்தையும் ஏற்படுத்திக் கொள்வதுடன், வாழ்க்கை நிலையற்றது என்ற உணர்வும் வேண்டும். சச்சிதானந்தம் தான் குரு, குரு வடிவில் ஒரு மனிதர் உன் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால், சச்சிதானந்தமே அந்த வடிவத்தில் வந்திருக்கிறார் என்று அறிந்து கொள். குழந்தைக்கு மிட்டாயும், பொம்மையும் கொடுத்து தாயை அதிக நேரம் மறந்திருக்கச் செய்யலாம். ஆனால்,மிட்டாயைத் தின்றும், பொம்மை விளையாட்டும் முடிந்துவிட்டால் அம்மாவிடம் போக வேண்டும் என்று அது சொல்லும். தாயிடம் அழைத்து செல்லாவிட்டால் பொம்மையை வீசி எறியும், உரத்த குரலில் அழத் துவங்கும். அதுபோல், சுகபோக நாட்டம் தணிந்துவிட்டால் வைராக்கியம் பிறந்து விடும்.
இறைவன் மனிதனின் மனத்தைப் பார்க்கிறான், மாறாக ஒருவன் என்னென்ன செய்கிறான், எங்கெங்கே வாழ்கிறான் என்றெல்லாம் பார்ப்பதில்லை. இறைவனுடைய திருநாமத்தில் ருசி ஏற்படவேண்டும் என்று ஏக்கத்துடன் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பான். விழிப்புணர்வு பெற்றவர்கள் ஒரு போதும் தாளம் தவறுவதில்லை. பாவச் செயல்களையும் விலக்க வேண்டியதில்லை. இறைவனிடம் அவர்களுக்கு அதிக பக்தி நிறைந்திருப்பதால், அவர்கள் எதைச் செய்தாலும் அது நல்லதாகவே இருக்கும். அவர்கள் பாவத்தைச் செய்ய இறைவன் விடுவதே இல்லை.
உபதேசிப்பது மிகவும் கடினம். காரணம் பிறருக்கு போதிப்பதற்கு இறைவனுடைய அதிகார முத்திரை வேண்டும். இல்லாவிட்டால் போதனை கேலிக் கூத்தாகிவிடும். இறைவனே தரிசனம் தந்து, ஆணை பிறப்பித்தால் தான் அது முடியும். இறைவனுடைய நாமத்தை சொல்வதால் மனிதனுடைய மனம், உடல் அனைத்தும் பரிசுத்தமாகின்றன. இல்லறத்தில் இருந்தாலும் அவ்வப்போது தனிமையில் வாழ வேண்டும். மூன்று நாட்களாவது வீட்டை விட்டுத் தனிமையில் சென்று இறைவனை நாடி அழுதால் அது நல்லது. அது முடியாவிட்டால் ஒரு நாளாவது தனிமையில் இருந்து இறைவனைச் சிந்தித்தால் அதுவும் நல்லது தான்.
தீயவர்களிடம் சீற வேண்டும், அவர்கள் நமக்குத் தீங்குசெய்யாமல் இருப்பதற்காக அவர்களைப் பயமுறுத்த வேண்டும். ஆனால், அவர்கள் மீது ஒரு நாளும் விஷத்தைச் செலுத்திவிடக் கூடாது, தீமை செய்யக்கூடாது. அடிப்பது போல கோபம் வரலாம். ஆனால், அதனால் பிறருக்கு ஆபத்தை விளைவித்து விடக்கூடாது. ஆழ்ந்த பக்தி எவருக்கு இருக்குமோ, அவனுக்கு அரசன், தீயவர், மனைவி உட்பட அனைவரும் அனுகூலமாக அமைந்துவிடுவார்கள். மனப் பூர்வமான பக்தி இருந்தால் காலப் போக்கில் அவனுடைய மனைவியும் இறைநெறியில் செல்வது சாத்திய மாகிவிடும். அவன் நல்லவனாக இருந்தால் இறைவனது அருளால் மனைவியும் நல்லவளாக ஆகிவிடுவாள்.
இதயக் கோயிலில் இறைவனைப் பிரதிஷ்டை செய்ய விரும்பினாலோ, அவனை அடைய ஆசைப் பட்டாலோ பூம் பூம் என்று சங்கை ஊதுவதால் மட்டும் எந்தப் பயனும் இல்லை. முதலில் மனத்தைச் சுத்தமாக்க வேண்டும், மனம் தூய்மை ஆகிவிட்டால், அந்தப் புனித ஆசனத்தில் இறைவன் வந்து அமர்ந்து விடுவான்.