சபரிமலை செல்ல சுருளி அருவியில் மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2025 04:11
கம்பம்; சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு மண்டல பூஜையில் பங்கேற்க பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கியுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் தென் மாநிலங்களில் பிரசித்தி பெற்ற கோயில்களில் முதலிடம் பெறுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறந்து தரிசனத்திற்கு அனுமதி கிடைத்த போதும், ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் மகரவிளக்கு மண்டல பூஜை நிகழ்ச்சிகளே பிரதானமாகும். கார்த்திகை முதல் நாள் துளசி மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க செல்வது வழக்கம். ஆனால் இப்போது கூட்டத்தை கருத்தில் கொண்டு, பெரும்பாலான பக்தர்கள் முன்கூட்டியே மாலை அணிந்து விரதத்தை துவக்கி கோயிலிற்கு செல்ல துவங்கி உள்ளனர். கம்பம் சுருளி வேலப்பர் சுப்ரமணியசாமி ஐயப்பா சேவா சங்கத்தினர் தங்களது 48 வது ஆண்டு சபரி யாத்திரைக்கான நிகழ்ச்சியை ஆரம்பித்தனர்.
அதிகாலையில் சுருளி அருவியில் உள்ள கைலாசநாதர் குகை பகுதியில் ஏராளமான பக்தர்கள் நீராடி, குருநாதர் நாராயணன் பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்து விரதத்தை துவக்கி வைத்தார்.. முன்னதாக அங்குள்ள பாதவிநாயகர் கோயிலில் பூஜை செய்தும், . தொடர்ந்து அங்குள்ள ஐயப்பன் கோயிலில் படி பூஜை செய்தும் வழிபட்டனர். இந்த சேவா சங்கத்தின் குருநாதர், நாராயணன் கூறுகையில், " வழக்கமாக கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து விரதத்தை துவக்குவோம். கடந்தாண்டு முதல் முன்கூட்டியே செல்ல வேண்டும் என்பதற்காக முன் கூட்டியே மாலை அணிந்து விரதத்தை துவக்கியுள்ளோம். நேற்று காலை சுருளி அருவியில் குளித்து மாலை அணிந்து விரதத்தை துவக்கி உள்ளோம். எங்கள் குழுவில் 100 பேர்கள் வரை உள்ளனர். தற்போக 60 பேர்கள் வரை மாலை அணிந்து விரதத்தை துவங்கி உள்ளோம் " என்றார்.