பதிவு செய்த நாள்
09
ஏப்
2013
10:04
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில், பிறவி மருந்தீஸர் ஸ்வாமி கோவிலில் சித்திரை பெருவிழா நேற்றுக்காலை கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக நேற்று துவங்கியது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர். இந்திரன் முதலிய தேவரும், அகத்தியர் போன்ற முனிவரும், ஒன்பான் கோள்களும், முசுகுந்தன் முதலிய மன்னரும், சோமதர்மன், ஆலய கருப்பன் போன்ற அடியவர்களும் நீரில் மூழ்கி இறவா இன்பம் பெற்ற பிரம்மதீர்த்தம், புனித நீர் பொய்கையும் சூழ்ந்து விளங்கும், "வில்வாரணீயம் என்னும் பெயர் பெற்ற திருத்துறைப்பூண்டியில் வில்வமரத்தின் கீழ் பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸர் ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிறவி மருந்தீஸர் கோவிலில் சித்திரை பெருவிழாவில் நேற்றுக்காலை 9 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜையுடன் நந்தி பெருமானின் கொடி, பஞ்சமூர்த்திகள் எழுந்தருள கொடிமரத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து, கொடிமரத்துக்கு புனித நீரூற்றி அபிஷேகம் செய்தபின், யானை முகத்தான் ஆசி வழங்க சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, நந்தியம்பெருமானின் கொடி ஏற்றப்பட்டது. ஒருமாத காலம் நடக்கும் திருவிழாவில், வரும் 14ம் தேதியன்று, அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் சார்பில், புஷ்ப விமானத்தில் ஸ்வாமி வீதியுலாவும், 17ம் தேதியன்று, பக்தர்கள் வகையறா சார்பில், இந்திர விமான அலங்காரமும், 20ம் தேதியன்று, காலை, 10 மணிக்கு வெண்ணெய் தாழியும், இரவு, 10 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்வாமி வீதியுலாவும் வெகுவிமரிசையாக நடக்கிறது. பின்னர், 22ம் தேதியன்று, காலை, ஆறு மணிக்கு லாரி உரிமையாளர் சங்கம் சார்பில், தேரோட்டம் நடக்கிறது. இதில், சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். தொடர்ந்து, 29ம் தேதியன்று, இரவு, 9 மணிக்கு தெப்ப திருவிழாவும், 30ம் தேதி கொடியிறக்கமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை செயல் அலுவலர் நீதிமணி, கணக்கர் சீனிவாசன், மணியக்காரர் ராமமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். சிவாச்சாரியார் பாலு சிறப்பு கங்கணம் கட்டி, ஒரு மாத காலம் கோவிலில் தங்கி, சிறப்பு பூஜைகளை நடத்துகிறார்.