பதிவு செய்த நாள்
09
ஏப்
2013
10:04
ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலாவில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் குண்டம் இறங்கும் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடந்த, 6ம் தேதி, ஒடுவன்குறிச்சி கைலாசநாதர் கோவிலில் இருந்து, ஆஞ்சநேயர் உற்சவ மூர்த்தி எடுத்து வரப்பட்டது. அன்று இரவு, நாமகிரிப்பேட்டையில், பந்தசேர்வை மற்றும் திருவீதி உலா நடந்தது. ரதசோற்வத்தை, நாமகிரிப்பேட்டை யூனியன் சேர்மன் பொன்னுசாமி துவக்கி வைத்தார். நேற்று முன்தினம், நாமகிரிப்பேட்டையில் இருந்து, கோவிலுக்கு ஊர்வலமாக ஸ்வாமி எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மதியம், 1 மணிக்கு கன்னிமார் ஊற்றிலிருந்து, ஸ்வாமிக்கு சக்தி அழைத்தலும், ஸ்வாமி நீராடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. அதையடுத்து, குண்டம் இறங்கும் விழா நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் குண்டம் இறங்கி, ஸ்வாமிக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி, இந்து அறநிலையத் துறை இணை ஆணையாளர் மங்கையர்கரசி, கோவில் செயல் அலுவலர் ராஜாராம், புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து சேர்மன் மணி, உள்ளாட்சி பிரதிநிதிகள், பக்தர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.