கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த மேகலசின்னம்பள்ளி சவுடேஸ்வரி அம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 48 நாட்களுக்கு முன் நடந்தது. அன்றிலிருந்து கோவிலில் தினம் சிறப்பு பூஜைகள் நடந்தது. 48 நாட்கள் முடிந்து நேற்று நள்ளிரவு சிறப்பு நிகழ்வாக ஆண், பெண் வேடமணிந்து பச்சை கரகம் எடுக்கும் நிகழ்வு நடந்தது. முன்னதாக ஆதி சிவன் சவுடேஸ்வரி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.பச்சை கரகம் எடுத்து வந்த ஆண் நகர்வலம் வந்தார். இதனை தொடர்ந்து பச்சை கரத்தில் இருந்த மல்லிகை பூவை பூசாரி எடுத்து தீ மிதிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தீக்குழியில் போட்டார். இந்த பூ வாடாமல் இருந்தது.ஐதீகப்படி மல்லிகை பூ வாடாமல் இருந்தால் மட்டுமே பக்தர்கள் தீ மிதிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டும் மல்லிகை பூ தீயில் வாடாமல் இருந்ததால், அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிமையில் நின்று தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர்.விழாவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.