ஆதிவராகப் பெருமாள் கோயில் சித்ரா பவுர்ணமி பிரம்மோற்சவ திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2013 11:04
அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப் பெருமாள் கோயில் சித்ரா பவுர்ணமி பிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கல்லிடைக்குறிச்சி ஸ்ரீ லட்சுமி சமேத ஆதிவராகப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி, பதினொறு நாட்கள் நடக்கும். நடப்பாண்டு பிரம்மோற்சவத்திற்காக கடந்த 7ம் தேதி கால் நாட்டப்பட்டு, நேற்று காலை கொடியேற்றப்பட்டது. முன்னதாக சுவாமிக்கும், தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தாயார்கள் சமேதமாக சுவாமி கோரதம் உட்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். பிரம்மோற்சவத்தின் பத்தாம் திருநாளான வரும் 24ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலையில் 4.30 மணியிலிருந்து 5.30 மணிக்குள் தாயார்கள் ஸ்ரீதேவி பூதேவி சமேதமாக லட்சுமிபதி தேரில் எழுந்தருளிகிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இவ்விழாவின், பதினொன்றாம் நாளான 25ம் தேதி தாமிரபரணி நதிக்கரையில் தீர்த்தவாரி எனப்படும், மங்கள ஸ்நானம் நடக்கிறது. இத்துடன் பிரமோற்சவ விழா நிறைவு பெறுகிறது.