Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஏப்
2013
17:36

உத்தரப் பிரதேசத்தில் கங்கைக் கரையோரம் அமைந்த கிராமம் நரதரா. அங்கு வாழ்ந்த ராம்தத் குன்வர், குஸும்தேவி தம்பதிக்கு 1918ல், இரண்டாவது மகனாக பிறந்தவர் ராம்சுரத் குன்வர். ராமர் மீது அன்பு கொண்டவர் என்பது இதன் பொருள்.  குழந்தைப் பருவத்திலேயே ராம்சுரத்துக்கு பக்தி இயல்பாக இருந்தது. கங்கை நதி மீது தணியாத ஆர்வத்துடன் இருந்தார். தினமும் கங்கையில் நீராடி மகிழ்வது அவரது வழக்கம். காட்டுப்பூக்களைப் பறித்துக் கொண்டு கோயிலில் வழிபட்ட பின்னரே காலை சாப்பாடு. பள்ளிக்குச் சென்றாலும், மனதில், கங்கையின் பிரவாகமே ஓடிக் கொண்டிருக்கும். பள்ளி முடிந்ததும், புத்தகப்பையை வீட்டில் போட்டுவிட்டு கங்கையை நோக்கி ஓடிவிடுவார். நதிக்கரையில் இருக்கும் துறவிகளைக் கண்டால் அவர் மனம் சந்தோஷத்தில் ஆழும். அம்மாவிடம் ரொட்டி வாங்கி வந்து அவர்களுக்குக் கொடுப்பார். இரவில், அம்மாவிடம் ராமர், கிருஷ்ணர் பற்றிய கதைகளைக் கேட்காமல் தூங்க மாட்டார்.  ராம்சுரத்துக்கு 16 வயதானது. கபாடியா பாபா என்ற துறவி அவனிடம், காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று வரும்படி கூறினார். அவரின் தூண்டுதல் படியே, காசி சென்று விஸ்வநாதரைத் தரிசித்தபோது, எல்லையில்லா பரவசம் ஏற்பட்டது. துறவு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த ராம்சுரத்திற்கு பெற்றோர் திருமணம் நடத்த ஆயத்தமாயினர்.

தல்கீரியா தேவி என்ற பெண்ணைப் பேசி முடித்தனர். விஷயமறிந்த ராம்சுரத், கங்கையில் குதித்து நீந்தி மறு கரையை அடைந்தார். மாப்பிள்ளை காணாமல் போனதால் அந்த பெண்ணை ராம்சுரத்தின் தம்பியான ராம்தஹீனுக்கு மணம் செய்து வைத்தனர். திருமணம் கழிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, வீட்டுக்கு வந்தான் ராம்சுரத். சில மாதங்களுக்குப் பிறகு, 1938ல் மீண்டும் வீட்டில் திருமணப் பேச்சு எழுந்தது. ராம்ரஞ்சனிதேவி என்ற பெண்ணை தங்கள் வீட்டு மருமகளாகப் பெற்றோர் தேர்ந்தெடுத்தனர். கட்டாயத் திருமணமாக ராம்சுரத்தின் கல்யாணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகும் படிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது.  1940ல் கடுமையான மழைபொழிந்ததால் கங்கையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. நரதரா கிராமமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ராம்சுரத் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. அந்தக் கவலை யிலேயே ராம்தத்குன்வர் காலமாகி விட்டார்.  ஒருவழியாக பி.ஏ. பட்டத்தோடு, ஆசிரியர் பயிற்சியையும் முடித்திருந்த ராம்சுரத் 1943ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். யசோதா, அமிதாப் என்னும் இரு குழந்தைகள் பிறந்தனர். ஆனால், வேலையிலோ, குடும்பத்திலோ அவர் மனம் முழுமையாக ஈடுபடவில்லை. கபாடியாவில் வசித்த பாபாவைச்சந்தித்தார்.  புதுச்சேரி, திருவண்ணாமலை சென்று அரவிந்தரையும், ரமணரையும் தரிசிக்கும்படி அவர் அறிவுறுத்தினார். அதன்படி திருவண்ணாமலை வந்த ராம்சுரத், ரமணரை தரிசித்தார்.

அரவிந்தரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஊருக்குத் திரும்பினார். பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியரானார். குடும்ப வாழ்வில் இருந்தாலும், உப்பு, காரத்தை விடுத்து பழ உணவுகளை உண்ண ஆரம்பித்தார்.  1949ல் மீண்டும் திருவண்ணாமலை ரமணாசிரமத்தை அடைந்தார். புற்றுநோயால் அவதிப் பட்ட ரமணரைக் கண்டு கண்ணீர் விட்டார். புதுச்சேரி சென்று அரவிந்தரை தரிசித்தார். அங்கிருந்த துறவி ஒருவர் ராம்சுரத்திடம், கேரளத்திலுள்ள குன்னங்காட்டு ராம்தாஸ்சுவாமியை தரிக்கும்படி கூறினார். அங்கு சென்ற ராம்சுரத், ராமதாசரின் ஆடம்பரநிலையை கண்டு ஊர் திரும்பி விட்டார்.  1950ல் மாயா என்னும் பெண் குழந்தைக்குத் தந்தையானார். அந்த சமயத்தில் அரவிந்தர், ரமணரின் இறப்புச் செய்தி ராம்சுரத்தை எட்டியது. சொல்ல முடியாத துயரத்தில் மனம் வாடினார். பள்ளிக்கோடை விடுமுறையில் ஆறுதல் தேடி கேரளாவிலுள்ள குன்னங்காடு புறப்பட்டார். ஒருமாதம் தங்கினார். ஊர் திரும்பும்போது, புனித நதிகளில் நீராடி திருத்தலங்களைத் தரிசித்தார். 1952ல் மனைவி ரஞ்சனி நான்காவது கருவைத் தாங்கினார். இந்த சமயத்தில் கேரளாவிற்கு சுவாமி ராமதாசரைக் காண வந்தார். அவரை குருவாக ஏற்று, ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம் என்ற மந்திரத்தை உபதேசம் பெற்றார். அங்கிருந்து திருவண்ணாமலை வந்த ராம்சுரத், மூன்று வாரம் தங்கியிருந்தார். பக்தி பரவசத்தில் இருந்த அவர், மீண்டும் கேரளா புறப்பட்டார். ஈரோடு ரயில்நிலையத்தில் இன்ஜின் மோதி இடது கை எலும்பு முறிந்தது. விஷயம்அறிந்த உறவினர்கள் அவரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.  அதன்பின், யாருடனும் பேசாமல் ராம மந்திரத்தை ஜெபித்து வந்தார். மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு கேரளா வந்தார். ஆனால், ராமதாசர் ராம்சுரத்தை தன்னோடு சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார். எனவே சொந்த ஊருக்குச் சென்று, குடும்பத்தினரை விட்டு விட்டு துறவியாகத் திரிந்தார்.  இறுதியாக திருவண்ணா மலையை இருப்பிடமாக்கிக் கொண்டார். தேங்காய் சிரட்டையை கையில் ஏந்தி உணவு ஏற்றார். பனை ஓலை விசிறியையும் வைத்துக் கொண்டார். குளிப்பதை நிறுத்தி விட்டார். பெற்றோர் இட்ட பெயரான ராம்சுரத் குன்வர் யோகி ராம்சுரத் குமார் என்றானது. மக்கள் அன்போடு விசிறி சாமியார் என்று அழைத்து மகிழ்ந்தனர். அவரின் புகழ் உலகெங்கும் பரவியது. வெளிமாநிலம், வெளிநாட்டு பக்தர்களும் கூட அவரைத் தரிசிக்க வந்தனர். 1993ல் ஆஸ்ரமம் ஒன்றை கட்டி அவரைத் தங்க வைத்தனர். ரமணரைப் போலவே, இவருக்கும் புற்றுநோய் உண்டானது. 2001, பிப்.20ல் இறைவனோடு கலந்தார்.  

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.