பதிவு செய்த நாள்
22
ஏப்
2013
10:04
சின்னநாகபூண்டி: ஆர்.கே.பேட்டை அடுத்த, சின்னநாக பூண்டி, நாகவள்ளி சமேத நாகேஸ்வரர் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழாவில், நேற்று, நாகேஸ்வரர், தேரில் பவனி வந்தார். நாகேஸ்வரர் கோவிலில், கடந்த, 14ம் தேதி பிரம்மோற்சவம் துவங்கியது. தினமும் மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிம்மம், யானை, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் உற்சவர் புறப்பாடு நடந்தது. வாசுகி என்ற நாகம், மூலவருக்கு அபிஷேகம் செய்தது, இந்த தலத்தின் சிறப்பு. இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை சேஷ வாகனம் நடந்தது. சக்கரத்தில் சிக்கி...:தொடர்ந்து நேற்று காலை தேர் திருவிழா நடந்தது. காலை, 8:00 மணிக்கு கோவில் வளாகத்தில் இருந்து தேர் புறப்பட்டது. சின்னநாகபூண்டியின் முக்கிய வீதிகளின் வழியாக தேரோட்டம் நடந்தது. இதில், அம்மையார்குப்பம், பாலாபுரம், ராமாபுரம், வீரமங்கலம், வெங்கடபெருமாள்ராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேர், வி.பி.ஆர்.புரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, தேரை வடம் பிடித்து இழுத்து வந்தவர்களில் ஒருவர், கால் தவறி விழுந்தார். வேகமாக வந்து கொண்டிருந்த தேரின் சக்கரத்தில் சிக்கி, அவரது இரண்டு கால்கள் நசுங்கின.
வலியால் துடித்த அவரை, உடனே சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர், அஸ்வரேவந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து மகன் கர்ணன், 40, எனவும், பெயின்டராக வேலை செய்து வந்தார் எனவும் தெரிய வந்தது.இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார், வழக்கு பதிந்து, விசாரித்து வந்தனர். இதனால், தேரோட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின், 11:00 மணியளவில் தேர் மீண்டும் புறப்பட்டு கோவிலை அடைந்தது. இன்று திருக்கல்யாணம்:விழா ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் கணேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர். இன்று இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. வரும், 29ம் தேதி கேடய உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.