பதிவு செய்த நாள்
24
ஏப்
2013
10:04
பழநி: பழநி அருகே அமராவதி ஆற்றங்கரையில், 1200 ஆண்டுகள் பழமையான, மகாவீரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சுவாமிநாதபுரம் அருகே, அமராவதி ஆற்றங்கரையில், தொல்லியியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, இந்திய தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி, வரலாற்று ஆய்வாளர் ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர், கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 1200 ஆண்டுகள் பழமையான, தனிக்கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ள, மகாவீரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
நாராயணமூர்த்தி கூறியதாவது: சமண மதத்தின், 24வது தீர்த்தங்கரான மகாவீரர், தனிக்கல்லில், 5 அடி உயரமும், 4 அடி அகலத்துடன், சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளார். தலையைச் சுற்றி ஒளிவட்டமும், மூக்குடை எனும், மூன்றடுக்கு நிலா உள்ளது. மகாவீரர் இடபுறம் மாதங்கரும், வலதுபுறம் சித்தாயிகாவும் உள்ளனர். மகாவீரர் சிம்மாசனத்தில், மூன்று சிம்மங்கள் உள்ளன. இதுபோன்ற சிலை, விழுப்புரம் மாவட்டம், சோழவாண்டி புரத்தில் உள்ளது. இச்சிலை கிடைத்துள்ள அமராவதி ஆற்றங்கரையில், கி.பி., 7, 8 ம் நூற்றாண்டில் சமண சமயம் செழிப்புற்றும், பாண்டிய நாட்டிற்கும்,கொங்குநாட்டிற்கும் எல்லைப் பகுதியாகவும் இருந்துள்ளது. பிற்காலத்தில் சைவ சமயத்தின் எழுச்சியால், மெல்ல மெல்ல சமண சமயம் அழிந்திருக்க வேண்டும். இதற்கு ஆதரமாக இச்சிலை கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.