பதிவு செய்த நாள்
24
ஏப்
2013
10:04
கோபிசெட்டிபாளையம்: புஞ்சை துறையம்பாளையம் வனத்தில் உள்ள நவக்கிணறு மாதேஸ்வரன் கோவில் குண்டம் திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். புஞ்சை துறையம்பாளையம் வனத்தில், ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் நவக்கிணறு மாதேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, வனத்துறையின் அனுமதியுடன், இக்கோவிலில் குண்டம் திருவிழா நடத்தப்படுகிறது. கோவில் குண்டம் திருவிழா ஏப்ரல், எட்டாம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் தீர்த்த குடம் எடுத்து வருவதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சியும், நேற்று காலை குண்டம் திருவிழாவும் நடந்தது. கோவில் முன் அமைக்கப்பட்ட, 60 அடி நீள குண்டத்தில், தலைமை பூசாரி வேலுமணி, குண்டத்தில் பூ போட்டு ஸ்வாமியை வணங்கி பின் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து பூசாரிகள் மற்றும் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் என, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். குண்டம் திருவிழாவில் புஞ்சை துறையம்பாளையம், டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி, நாமக்கல், கோபி, ஈரோடு, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த, 6,000க்கும் மேற்பட்ட பொது மக்கள், ஸ்வாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு செல்லும் சாலையில் வன விலங்குகளில் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வேன், டூ விலர், மினிடோர் வேன் மூலமாக கூட்டம் கூட்டமாக பக்தர்கள் சென்றனர். கோவில் அருகே உள்ள குளத்தில் எப்போதும் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால், வன விலங்குகளின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ராஜம்மாள் ரங்கசாமி கவுண்டர், கமிட்டி உறுப்பினர்கள் நடராஜன், நாகராஜ் மற்றும் பலர் செய்திருந்தனர். குண்டம் திருவிழாவை முன்னிட்டு வனத்துறையினர், வேட்டை தடுப்பு குழுவினர் மற்றும் பங்களாபுதூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.