பதிவு செய்த நாள்
26
ஏப்
2013
11:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த சூலக்கல் மாரியம்மன் கோவிலில் திருப்பணி நிறைவடையாததால், ஐந்தாவது ஆண்டாக தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அடுத்த சூலக்கல் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பக்தர்கள் இக்கோவிலுக்கு அதிகளவில் வருவர். ஆண்டுதோறும், சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை இக்கோவிலில் தேர் திருவிழா நடக்கும். தேர் திருவிழாவில், பழமையான மரத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படும். 200 ஆண்டுக்கு முன் தயாரிக்கப்பட்ட இத்தேரின் பல பகுதிகள் கரையானுக்கு இரையாகியதால், புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. இதனால், 2008ம் ஆண்டு தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டது. தேரில் அம்மன் வைக்கும் பீடம் உட்பட அனைத்தும் வலுவிழந்த நிலையில் இருந்ததால், புதிதாக தேர் வடிவமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஆய்வு செய்து புதிய தேர் வடிவமைக்க திட்டமதிப்பீடு தயாரித்துள்ளனர். இதனால், தொடர்ந்து நான்காண்டுகளாக தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டது.
கடந்தாண்டு, 28 லட்சம் ரூபாய் மதிப்பில் தேரை வடிவமைக்க திட்டம் தயாரித்து, அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில் புதிய தேர் வடிவமைக்க டெண்டர் விடப்படும். தேரில், மர சிற்ப வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்படவுள்ளது. தேரின் சக்கரம் சமீபத் தில் புதுப்பிக்கப்பட்டதால், மற்ற பகுதிகள் மட்டும் வடிவமைக்கப்பட உள்ளன. இப்பணி நிறைவடைய இன்னும் ஓராண்டாகும் என்பதால், ஐந்தாவது ஆண்டாக இந்தாண்டும் தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், "புதிய தேர் வடிவமைக்க, நிதி ஒதுக்கப்பட்டவுடன், டெண்டர் விடப்படும். பழைய தேர் போல், வடிவமைக்கப்படவுள்ளது. திருப்பணிகள் இன்னும் நான்கு மாதங்களில் நிறைவு செய்யப்படும். அடுத்தாண்டுக்குள், அனைத்து பணிகளும் நிறைவு செய்து, தடைப்பட்டுள்ள தேர் திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.