பதிவு செய்த நாள்
26
ஏப்
2013
11:04
அட்சய திரிதியை இவ்வாண்டு மே13ல் வருகிறது. சித்திரை மாதம் வளர்பிறை திரிதியை திதியை அட்சய திரிதியை ஆக கொண்டாடுகிறோம்.
அட்சய என்றால் வளர்தல்: திரவுபதி, கவுரவர்களின் அவையில் துகில் உரிந்து அவமானப்படுத்தப்பட்டாள். தன்னைப் பாதுகாக்க வர வேண்டும் என கிருஷ்ணரை அழைத்தாள். அப்போது, அவள் கிருஷ்ணரின், பதினாறு திருநாமங்களைச் சொல்லி கதறினாள். கிருஷ்ணரும் அங்கு வந்து "அட்சய என்றார். அவளது ஆடை வளர்ந்து கொண்டே போனது. துகிலுரிந்த துச்சாதனன் மயங்கியே விழுந்து விட்டான்."அட்சய என்ற சொல், அந்தளவுக்கு வளர்ச்சியைத் தரக்கூடியது. இதனால் தான், அட்சய திரிதியை நாளில், பொருட்களை வாங்கினால் அவை பல மடங்காகப் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க வேண்டுமென்பதில் தான், அநேகர் அக்கறை செலுத்துகின்றனர். தங்கம் வாங்க வசதியில்லாதவர்கள், இந்த நாளில் வெள்ளி, கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ், ஏ.சி., என எந்தப்பொருளையும் வாங்கலாம்.இந்நாளில், புத்தாடை உடுத்துவதும், தானம் செய்வதும் விசேஷம். எனவே ஜவுளிக்கடைகளுக்கும் சென்று வரலாம்.
இந்த நாளில் பாத்திரங்கள் வாங்கலாம். இவற்றை முதன் முதலாக அடுப்பில் வைக்கும் போது, இஷ்ட தெய்வத்திற்குரிய ஸ்லோகங்கள், பாடல்களையோ சொல்லி வைப்பதன் மூலம் ஆண்டு முழுவதும் தடையற்ற வகையில் உணவு கிடைக்கும். சிலப்பதிகார மாதவியின் மகள் மணிமேகலை வைத்திருந்த பாத்திரத்துக்கு "அட்சய பாத்திரம் என்று பெயரே சூட்டியிருந்தாள். இந்த பாத்திரத்தில் எடுக்க எடுக்க உணவு வந்து கொண்டே இருக்கும்.இதெல்லாம் சிரமம் என்பவர்களுக்கு எளிய வழி ஒன்று உள்ளது. இந்நாளில், மளிகைப் பொருட்கள் வாங்கி வைக்கலாம். திரிதியை திதி லட்சுமிக்குரியது என்பதால் அவளுக்கு பிடித்தமான மஞ்சள், உப்பு அவசியம் வாங்கி வையுங்கள். ஆக, அட்சய திரிதியை அன்று நீங்கள் விரும்பும் எந்தப் பொருளையும் வாங்கலாம். ஆண்டு முழுவதும் வளர்ச்சியைக் காணலாம்.