பதிவு செய்த நாள்
26
ஏப்
2013
11:04
திற்பரப்பு: காளிமலை சித்ரா பவுர்ணமி விழாவில் நேற்று(25ம் தேதி) ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு, பொங்கலிட்டு வழிபட்டனர். காளிமலை சித்ரா பவுர்ணமி விழா கடந்த 19ம் தேதி துவங்கியது. நிறைவு நாளான நேற்று பொங்கல் விழா நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 7 மணிக்கு கற்றுவா, பச்சைக்காவு தேவி கோயிலில் இருந்து காணியின மக்கள் மேள, தாளம் மற்றும் விளக்குகெட்டுடனும் காளிமலைக்கு புறப்பட்டனர். இவர்களுடன், பச்சைக்காவு பக்தர்கள் காளிமலை அம்மனுக்கு அபிஷேகம் செய்ய அபிஷேக நிவேத்யங்கள் நிறைத்த கலசங்களுடன், 500க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் தீபம் மற்றும் பழத்தட்டுகளுடன் சென்றனர். 9.20 க்கு காளி கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பில் கோயில் மேல்சாந்தி சுரேஷ்சர்மா தீபம் ஏற்றினார். தொடர்ந்து, மலை உச்சியில் பெண்கள் பொங்கலுக்கு தீபம் ஏற்றினர். 10 மணிக்கு கோயில் சன்னதியில் வந்த காணி மக்களையும், பச்சைக்காவு பக்தர்களையும் கோயில் நிர்வாகிகள் வரவேற்றனர். இவர்கள் கொண்டுவந்த பூஜை பொருட்களை அம்மனுக்கு படைத்தனர். பொங்கல் நிவேத்யம் பொங்கிவர, மலைப்பகுதி முழுவதும் தேவி கோஷம் நிறைந்தது. மலை உச்சி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. மதியம் 12.30 மணிக்கு பொங்கலுக்கு நிவேத்யம் செய்யப்பட்டது. மதியம் 1 மணியுடன் பொங்கல் படைத்த பெண்கள் அம்மனுக்கு நேத்திக்கடன் செய்த நிறைவுடன் மலை இறங்கினர். நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்லன், மாநில பொறுப்பாளர் ஆசீர்வாதம், காளிமலை நிர்வாகிகள் சலீம்குமார், சுதர்ஷன், பிரபாகரன், முருகன், ராஜ்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.