அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப் பெருமாள் கோயிலில் சித்திரை பரம்மோற்சவத்தை முன்னிட்டு "ஆதிமூலம் - கோவிந்தா என்னும் பக்தி கோஷம் முழங்க நேற்று தேரோட்டம் நடந்தது.கல்லிடைக்குறிச்சி ஸ்ரீலட்சுமி சமேத ஆதிவராகப் பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இத்திருவிழாவின் ஏழாம் திருநாளான கடந்த 21ம் தேதி கோ-ரதம் என்னும் ஐதீகத்திற்கேற்ப "காளைகள் பூட்டப்பட்ட ரதத்தில் தயார்கள் ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக லட்சுமிபதி வீதி உலா வந்தார்.இத்திருவிழாவின் பத்தாம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலையில் சுவாமி ஆதிவராகப் பெருமாள், உற்சவர் லட்சுமிபதி, தாயார்கள் ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து தாயார்கள் ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக லட்சுமிபதி தேரில் எழுந்தருளினார். காலை 7.40 மணியளவில் நிலையத்தில் இருந்து தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் "ஆதிமூலம் - கோவிந்தா - நாராயணா என்னும் பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக 10.08க்கு தேர் நிலையத்தை வந்தடைந்தது. சுவாமிக்கும், தாயாருக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. கல்லிடைக்குறிச்சி டவுன் பஞ். தலைவர் இசக்கிபாண்டியன், இந்து அறநிலையத் துறையினர், ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழாவின் 11ம் திருநாளான இன்று (25ம் தேதி) தாமிரபரணியில் தீர்த்தவாரி நடக்கிறது. மாலை 5 மணிக்கு சுவாமியும், தாயாரும் பல்லக்கில் வீதி உலா வருகின்றனர்.