பதிவு செய்த நாள்
27
ஏப்
2013
11:04
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு லட்சதீபம் ஏற்றப்பட்டது. மதுரகாளியம்மன் கோவிலில் சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு பருவமழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிடவும், உலக சுபிட்சத்திற்காகவும் ஸ்ரீமதுரகாளியம்மன் லட்ச தீப விழா கமிட்டி சார்பில் 8வது ஆண்டு லட்ச தீபம் ஏற்றும் விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு டி.ஆர்.ஓ., சுப்ரமணியன் தலைமை வகித்தார். அரிமா சங்க மாவட்ட தலைவர் பொன்கேசவராஜசேகரன் வரவேற்றார்.பெரம்பலூர் ஆர்.டி.ஓ., புஷ்பமாரியம்மாள் முன்னிலை வகித்தார். விழாவில் டி.ஆர்.ஓ., சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவி கலைவாணி சுப்ரமணியன் குத்துவிளக்கேற்றி வைத்து லட்ச தீபவிழாவை தொடங்கி வைத்தனர்.இதைத்தொடர்ந்து மதுரகாளியம்மன் கோவில் வளாகத்திலும், திருக்குளத்திலும் லட்ச தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரி மாணவிகள் தீபங்களை ஏற்றி வைத்தனர். தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் தாசில்தார் ரெங்கராஜூ, அரிமா சங்க மண்டல தலைவர் கார்த்திகேயன், வி.ஏ.ஓ., அண்ணாதுரை, ரெங்கராஜ், ஸ்ரீபாலதண்டாயுதபாணி கிரிவல கமிட்டி தலைவர் மகேஸ்வரன், சிறுவாச்சூர் பஞ்சாயத்து தலைவர் சிவகாமி அண்ணாமலை, துணை தலைவர் ரெங்கநாதன், கலைச்செல்வி கேசவராஜசேகரன், உய்யகொண்டான்மலை, தமிழ்மணிசண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்சி உய்யகொண்டான்மலை சண்முகம் நன்றி கூறினார்.