பதிவு செய்த நாள்
06
மே
2013
10:05
ஆத்தூர்: ஆத்தூர், வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள பஞ்ச ஸ்தலங்களில், ஸ்வாமிக்கு மழை வேண்டி வருண ஜெப யாக வேள்வி, கூட்டு பிரார்த்தனை பூஜைகள் நடந்தது. ஆத்தூர் தாலுகா, வடக்கு பகுதியில் உள்ள கல்வராயன் மலை தெற்குமலை சரிவில், 1,266 மீட்டர் உயரத்தில், மேல்வெள்ளாறு எனும் இடத்தில், வசிஷ்டநதி உற்பத்தியாகிறது. வசிஷ்டநதி மூலம், 49 ஏரிகள், 79 அணைக்கட்டுகள் பாசனம் பெறுகிறது. இந்நிலையில், ஆத்தூர் அதன் சுற்றுவட்டார கிராம பகுதியில், பருவ மழை பொய்த்து போனதால், நீர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, விவசாயிகள் பயிர் செய்ய முடியாமலும், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள பஞ்ச ஸ்தலங்களில், மழை வேண்டி, "வருண ஜெபம் சிறப்பு யாக வேள்வி பூஜைகள் செய்து, ஸ்வாமிக்கு அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடு செய்ய, பக்தர்கள் முடிவு செய்தனர். நேற்று, கூகையூர் ஸ்வர்ணபுரிஸ்வரர் (ஆகாயம்), ஆறகளூர் காமநாதீஸ்வரர் (வாயு), ஏத்தாப்பூர் சாம்பக மூர்த்திஸ்வரர் (நீர்), பேளூர் தான்தோன்றீஸ்வரர் (நிலம்), ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர் (நெருப்பு), ஆகிய ஸ்தலங்களில் மழை வேண்டி, வருண ஜெபம் வேள்வி பூஜை, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட கூட்டு வழிபாட்டு பூஜைகள் நடந்தது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.