திண்டிவனம் : தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியது. திண்டிவனம் அடுத்த தீவனூர் ஆதிநாராயண பெருமாள் என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று காலை பிரம்மோற்சவ விழா துவங்கியது. இதனை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. முன்னதாக நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. வெள்ளி கவசம் அணிவிக்கபட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கருடக்கொடி ஏற்றப்பட்டது. விழா நடைபெறும் 10 நாட்களிலும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் அமர்த்தப்பட்டு வீதியுலா நடைபெறும். 20ம் தேதி கருட வாகன உற்சவமும், 22ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 24ம் தேதி காலை தேர் உற்சவமும் நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.