பதிவு செய்த நாள்
27
மே
2013
11:05
திருநெல்வேலி: நெல்லை ஜங்ஷன் வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழாவின் 4வது நாளான நேற்று யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் நடந்தது. நெல்லை ஜங்ஷன் வரதராஜ பெருமாள் கோயிலில் 55 அடி உயரத்தில் ராஜகோபுரம் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோயில் முன் பகுதியில் 2400 சதுர அடியில் கற்களால் முன் மண்டமும் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலை சுற்றிலும் பிரமாண்ட மாட வீதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. 25ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்து வருகிறது. கும்பாபிஷேக விழாவின் 4வது நாளான நேற்று காலை ஸயனோத்தாபநம், புண்யாக வாசனம், நித்தியராதனம், மஹா சாந்தி, சமித் ஹோமம் துவக்கம், அனைத்து ஹோம குண்டங்களிலும் அக்னி ஆராதனம், 2வது வேளை பிரதான உக்த ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து மஹா சாந்தி சாரு ஹோமம், பூர்ணாஹூதி, த்விக்குணாராதனம், தளிகை, சாற்றுமுறை கோஷ்டியும் நடந்தது. மாலையில் சாயரட்சை, ஆராதனம், அக்னி ஆராதனம், மஹாசாந்தி ஆஜ்ய ஹோமம், சயனாதிவாஸம், 3வது வேளை பிரதான உக்த ஹோமங்கள், பூர்ணாஹூதி, தளிகை, சாற்றுமுறை கோஷ்டி நடந்தது. 5வது நாளான இன்று காலை 7 மணி முதல் யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் நடக்கிறது. நேற்று இரவில் கிருஷ்ணாபுரம் டாக்டர் பாலசுப்பிரமணியன் குழுவினரின் பஜனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.