பதிவு செய்த நாள்
28
மே
2013
10:05
ராமசெட்டிபாளையத்திலுள்ள, ஸ்ரீசதாசிவன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. இவ்விழா, நேற்று முன் தினம் அதிகாலை கணபதி யாகத்துடன் துவங்கியது. ஸ்ரீலஸ்ரீ நடராஜசாமிகள் தலைமையில் பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனைகள் நடந்தது. நேற்று காலை பசவேசர் மண்டப திறப்பு விழா, ஆன்மிகவாதி மணிவீராசாமி தலைமையில் நடந்தது. மாலை 3.00 மணிக்கு, பேரூர் சாந்தலிங்கர் மடத்திலிருந்து யானை பரிவாரத்துடன் முளைப்பாரி எடுத்து வருதலும், 6.30 மணிக்கு முதல் கால யாக பூஜைகளும், இரவு இன்னிசை பாட்டுமன்றமும் நடந்தது. இதையடுத்து, இன்று(28ம்தேதி) காலை 9.00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5.00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, இரவு 7.00 மணிக்கு கலைநிகழ்ச்சியும் நடக்கிறது. இறுதியாக, நாளை(29ம் தேதி), அதிகாலை 4.00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும், கலசங்கள் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு, 6.15 மணிக்கு மேல் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், 9.15 மணிக்கு மேல், ஸ்ரீசதாசிவ பெருமான், ஸ்ரீவேதநாயகிக்கு மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. இதில், கும்பகோணம் நீலகண்ட சாரங்க தேசிகேந்திரி சுவாமிகள், பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள், பிள்ளையார்பீடம் பொன்மணிவாசக அடிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை, கோவில் திருப்பணிக்குழு செய்துள்ளது.