பதிவு செய்த நாள்
05
ஜூன்
2013
03:06
இன்றைய வாழ்வில் நேர்மையைக் காண்பதே அரிதாகி விட்டது. அரசியல், விளையாட்டு என எல்லாத் துறைகளிலும் ஒட்டு மொத்த குடும்பமே சேர்ந்து கொள்ளையடிக்கிறது. ஆனால், இப்படியும் நம் நாட்டில் ஒரு அரசியல் குடும்பம் இருந்தது. முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் துணைவியார், லலிதா சாஸ்திரி கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இந்தியில் பக்திப்பாடல் நிறைய எழுதியிருக்கிறார். ஒருமுறை இசை யமைப்பாளர் சித்ரகுப்தா இசையில், பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பக்திப் பாடல்களைப் பாடினார். இதை ஏவி.எம்.மின் சரஸ்வதி ஸ்டோர்ஸ் பாடல் நிறுவனம் இசைத்தட்டாக வெளியிட்டது. ஏவி.எம், தன் மகளுடன் டில்லிக்கு புதிய இசைத் தட்டுடன் புறப்பட்டார். லலிதா சாஸ்திரியிடம், ஒருதட்டில் வெற்றிலை, பாக்கு, பழங்கள், பட்டுப்புடவை எல்லாம் அடுக்கி, அவற்றோடு இசைத்தட்டையும் வைத்துக் கொடுத்தார். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார் திருமதி சாஸ்திரி. உபசரிப்பு முடிந்ததும், ஏவி.எம்.,தான் தங்கியிருந்த விடுதிக்கு மகளுடன் திரும்பினார். அங்கே திருமதி சாஸ்திரியின் உதவியாளர், பட்டுப்புடவையைக் கொண்டு வந்து கொடுத்தார். நீங்கள் கொடுக்கும்போதே மறுத்துவிட்டால் உங்களின் மனம் கஷ்டப்படும். உடனே மறுப்பது மரியாதையும் ஆகாது என்பதால் பட்டுப் புடவையைப் பெற்றுக் கொண்டேன். கணவர் பிரதமராக இருக்கும் போது வெகுமதி பெற்றுக் கொள்வது சரியில்லை என்ற விளக்கத்தையும் லலிதா சாஸ்திரி சொல்லி அனுப்பி இருந்தார். திருமதி சாஸ்திரி, லால்பகதூர் சாஸ்திரியின் நேர்மையையும், அதே நேரம் மற்றவர் மனம் புண்படாத வகையில் நடந்து கொண்ட விதத்தையும் கண்டு ஏவி.எம்., குடும்பத்தினர் நெகிழ்ந்தனர். இதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்க முடியுமா! ஹூம்... ஓதுவதை ஓதி வைப்போம். ஒருவராவது திருந்த மாட்டாரா என்ன!